81
கண்ணுங் கருத்துமாகக் கவனித்து, உணவு அளித்து பெருமானார் அவர்கள் உண்ட பின் மீந்ததையே உண்டனர்.
பின்னர், பெருமானார் ஸைதையும், அபூக்கர் அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ்வையும் மக்காவுக்கு அனுப்பித் தங்கள் குடும்பத்தினரை அழைத்து வருமாறு செய்தார்கள்.
பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு வந்து தங்கியதும், அங்கே ஒரு பள்ளிவாசலை நிறுவத் தீர்மானித்தார்கள்.
தங்களுடைய ஒட்டகம் முதன் முதலாக எந்த இடத்தில் நின்றதோ அந்த இடத்திலேயே பள்ளி வாசலைக் கட்டவேண்டும் என்பது பெருமானார் அவர்கள் விருப்பம்.
அந்த இடமானது ஸஹ்லு, ஸூஹைலு என்ற அநாதைச் சகோதரர் இருவருக்கு உரியது.
பெருமானார் அவர்களின் எண்ணத்தை அறிந்த அந்தச் சகோதரர்கள் விலை ஏதும் பெறாமலேயே இடத்தைத் தர முன் வந்தனர்.
கருணையே உருவான பெருமானார் அவர்கள், அபூபக்கர் அவர்களைக் கொண்டு அந்தச் சகோதரர்களுக்கு, இடத்துக்கான கிரயத்தைக் கொடுக்கச் செய்தார்கள்.
பள்ளிவாசல் கட்டட வேலை தொடங்கப்பட்டது. மற்றவர்களுடன் சேர்ந்து பெருமானார் அவர்களும் கட்டட வேலை செய்தார்கள்.
பள்ளிவாசல் எளிய முறையில் அமைந்தது. எனினும் வணக்கம், தூய்மை, ஒழுக்கம், சத்தியம், சுத்தம் என்னும் உபகரணங்கள் அதில் இருந்தன.
பள்ளிவாசலைச் சார்ந்த இரண்டு அறைகள் பேரீச்ச ஓலைகளால் அமைக்கப்பட்டு, அவற்றிலே பெருமானார் அவர்களும், குடும்பத்தினரும் இருந்து வந்தனர்.
7