அண்ணாதுரை
27
உழைத்து அலுப்பதும், உருக்குலைவதும், ஓயாமல் உழைப்பதும், வாழ்வின் சுவையையே காணாதிருப்பதும், இன்று பாட்டாளியின் ‘கதி’யாக இருக்கிறது. இதனால், தொழிலாளி, துயரின் உருவமாகிறான். அடிமைப்படுகிறான். வாழ்வு பெரியதோர் சுமை என்று எண்ணுகிறான். இந்த நிலையை மாற்றவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள், எட்டு மணி நேரவேலை திட்டத்தை வலியுறுத்தினர். அதனை வலியுறுத்த, ஆண்டு தோறும் மே மாதம் முதல் தேதி அன்று விழா நாளாகக் கொண்டாட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். இந்த விழாவின் துவக்கத்தின்போது, சோவியத் ரஷ்யா இல்லை! ஜாரின் ரஷியாவே இருந்தது. ரஷ்யா நாடு அல்ல; இவ்விழா விமரிசையாக நடந்த இடம் அமெரிக்கா. எனவே, மே தினத்தைப் பாட்டாளிகளின் விடுதலைக்காகப் பாடுபடும் நோக்கங் கொண்ட எல்லா கட்சியினரும் கொண்டாடலாம்.
ஜாரின் கொடுங்கோலாட்சிக் காலத்திலும், ரஷ்யாவில், மே தினம் மகத்தான விழாவாகக் கொண்டாடப்பட்டே வந்தது. பயங்கரமான அடக்கு முறை இருந்துங்கூட, மே தினத்தன்று ஊர்வலம் நடத்தியும், துண்டு வெளியீடுகளை வழங்கியும், பொதுக்கூட்டம் நடத்தியும், மே தினத்தை அவர்கள் கொண்டாடத் தவறியதில்லை. போலீசின் தடியடி மட்டுமல்ல, பட்டாளத்தாரின் குண்டுகள், விழாக் கொண்டாடுவோர் மீது பாய்ந்த காலம் அது.
மே தினத்தைத் தொழிலாளரின், விடுதலை விழா நாளாக மாற்றி அமைத்தவர் மாவீரர் லெனின். தங்கள்