பக்கம்:நமது முழக்கம்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாதுரை

31



அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்துப் போராடினார்களோ, பிரான்சிலே பணப் பட்டாளத்தின் கொடுமைகளை எதிர்த்துப் பல பட்டினி பட்டாளங்கள் ஒன்று சேர்ந்து தங்கள் புரட்சிச் சக்தியின் மூலம் லூயி மன்னருக்கு அறிவுறுத்தினார்களோ, அதே போன்று நம் நாட்டுத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும். மக்களின் சக்தி ஒன்று திரண்டு மக்களை வாட்டி வதைக்கும் முதலாளித்துவத்திற்குப் புத்தி புகட்ட வேண்டும்.

பாட்டாளிகளின் போராட்ட முயற்சியின் இடையிலே ஓர் நாள் ஓய்வு பெற்று நின்று, சென்ற கால வருங்கால கணக்கைப் பார்க்கும் திருநாளே இம் மே நாள். சென்ற காலங்களில் மகத்தான வெற்றிகளைக் காண முடியா விட்டாலும், கண்ட சிறுசிறு வெற்றிகளை நினைந்து, மகிழ்ந்து, உள்ளத்தை ஊக்குவித்துக் கொள்ளவும், வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய செயல்களை எண்ணிச் செயலாற்றும் நெறியிலே உறுதி கொள்ளவும் இம் மே நாள் பயன்படுகிறது.

அவன் ஏன் காரில் போகிறான்-அது அவன் வந்த வேளை. நாம் ஏன் கஷ்டப்படுகிறோம்—இது நாம் வந்த வேளை. ஆண்டவனின் கிருபா கடாட்சம் இவ்வளவு தான்; இந்த ஜென்மத்தில் இப்படி கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமென்று எழுதி விட்டான்—என்று நம்பி நாசமாகிறது உழைப்போர் உலகம். இப்படி நம்பும் காரணத்தினாலேயே தொழிலாளர்கள் தமது இணையற்ற சக்தியை மறந்து முதலாளித்துவக் கொடுமைகளுக்கு ஆளாகி நிற்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_முழக்கம்.pdf/31&oldid=1770530" இலிருந்து மீள்விக்கப்பட்டது