பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

தோழி: பூ மணவாதா?

தலைவி: மணக்கும். ஆனால், மணப்பது வேறு, மகிழ்வதுவேறு; மணப்பது மூக்கு; மகிழ்வது மனம்; மனம் இல்லையானால் மகிழ்ச்சி ஏது?

தோழி: புறத்தே தோன்றுவதுதானே அகத்தும் தோன்றும்?

தலைவி: மனம் வேறிடத்தில் இருந்தால், எதிரிருப்பதும் தோன்றாது.

தோழி: உன் மனம் இங்கே தானே இருக்கிறது?

தலைவி: ஓட்டை மனம்! இந்த இன்பப் பொருளைத் துய்க்கும் கண்ணும் காதும் மூக்கும் நாவும் உயிரும் உடலும் இழந்து, நுறுங்கிய மனமே இங்கே இருக்கிறது. உயிரில்லாத பணம் இவற்றைத் துய்க்குமா? காதலும் வறள, இன்பமும் வறளச் செய்கிறதே அவருடைய பொருட் பற்று! பொன் என்று மகிழ்ந்தால், அதில் எந்த உயிர் தழைக்கும்? இந்த வருத்தம் ஒருபுறம். இந்த நிலையில் பாதிரி பாதிரி எனக் காது குடையக் கதறுகிறாள்.

தோழி: அவள் என்ன செய்வாள்? வயிறு வளர்க்க வேறு வழி ஏது? பொருள் தேடித் திரிவதன் பெருமை தெரிகிறதா? அவர்போல, அவளும் பொருள் தேடுகிறாள் என்றா? அவள்மேல் என்ன சீற்றம்?

தலைவி: சீற்றம் ஏன்? உலகம், தான் வாழமட்டும் பார்த்துக் கொள்கிறது; இன்பத்தினையே கொண்டு பிறருக்கு ஊட்டுவதாகக் கருதுகிறது. 'வேண்டா' என்றால் 'என்ன நன்றி கெட்டவர்கள்' என்று பழிக்கிறது.

தோழி: வயிற்று நோயாளிக்கு விருந்து செய்து வெறுப்படைவோர் போல.....

92