பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவத்தைக் கட்டிக்கொள்கிறாள்!

தலைவி: நான் சொல்லியதைச் சொல்லி ஏசாதே—அந்தோ! புறப் பொருளிலா இன்பமோ துன்பமோ? கூடி மகிழ்வோருக்குக் குலாவிக் களிக்க இவை பெருந்துணையாய் இன்ப மாகலாம். பிரிந்து வாடுவாருக்கோ......

தோழி: உன் புண்ணில் கோல்விட்டு அலைக்கிறாள் என்கிறாயா? பெரும் பாவி! பெரும்பாவி!

தலைவி: நையாண்டி பண்ணாதே. என்.......

தோழி: பின் என்ன? பூ விற்பதற்கா இவ்வளவு புகைகிறாய்?

தலைவி: ஐயோ பாவம்! என்மேல் அவளுக்கு என்ன பகையா? எப்படிப் பகை தோன்ற முடியும்? அயலாள் அவள்; என்னையே தெரியாதவள்.

தோழி: ஆனால்...

தலைவி: அறியாமையால் தன்னலத்தில் பிறரை அறியப் பொழுதில்லாமையால் பிறர் நலம் என்றே தன்னலத்தைக் கருதிவிடுவதால் நிகழும் நிகழ்ச்சி இஃது. எங்கும் அப்படித்தான். அவரும் அப்படி! இவளும் இப்படி!

தோழி: இவள் வந்ததுபோல அவரும் வருவார். என்ன மணம்? என்ன அழகு? ஆனால், உனக்குப் பிடியாது. ஆதலின், வாங்கவில்லை; இந்தத் தெருவழியே வர வேண்டா என்று சொல்லிவிடுகிறேன்.

தலைவி: பாவம்! ஏழைப் பெண் பிழைக்க வேண்டாவா? விலை கொடுத்து வாங்கு. பாதிரியின் அழகினை அறிவேன். நீயேனும் வாங்கி மகிழ்.

தோழி: அவளிடமா?

93