பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

தலைவி: அவள் என்ன செய்வாள்? எனக்காகவா நான் பேசுகிறேன்? என்னைப்போல எத்துணைப் பேர் வாடி வதங்குவார்கள்? தாமும் வாடத் தம்முடைய தலைவரையும் பழிக்க அன்றோ இந்தப் பாதிரிப் பூ அவர்களைத் தூண்டுகிறது? இத்துணைப் பாவமும் இந்த ஏழைப் பெண்மேல் படியுமே என்றுதான் என் மனம் நோகிறது.

தோழி: அவள் நினையாத ஒன்றுக்குத் தண்டனை வருமா?

தலைவி: பழத்தின்மேல் கல் விட்டெறிந்தது பறவையைக் கொன்றால் பாவம் வாராதா? தெரிந்து தொட்டால்தான் நெருப்புச் சுடுமோ? பிறர்க்கென்ன ஆகும் என்று பரிந்து வாழ்வதே பண்பாடு.

தோழி:

தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப ரன்றிமற்(று)
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால—உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.

தலைவி: நிறையப் படிக்கிறாய்போலும்! உனக்கு எது தெரியாது?

தோழி: ஒன்று தெரியவில்லை.

தலைவி: என்ன!

தோழி: பூ விற்பவளுக்கு இவ்வளவு நையும் மனம், அவருக்காகவும் நைய வேண்டாவா? உன்னைப்போல அவரும் வாடுவர் அல்லரோ? இவ்வளவு கனிந்த உள்ளங்கள் வாழாது வாடுமா! வருவார்! வருவார்! பாதிரிப் பூ வீடேறி வந்ததுபோல அவரும் வீடேறி வருவார். ஆனால், உலகம் என்ன சொல்கிறது தெரியுமா? தன்னலத்தில்

94