பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவளே மருந்து

அவன்: "தாயே! உன் தாய்மை அன்பு என்னே! என்னே!! நோன்பு நோற்றுக் கணவனைப் பெறுவார் பிறர். எனக்கோ, இந்த நோன்புக்கு முன்னரே, எளிதில் அருள் செய்தாய்: அவரே விரும்பி வந்தார். உனக்குத் தழையும் தாரும் சாத்த வருவதுபோல் அவர் என்முன் வந்த நிலையை உன் வழிபாடு செய்யும் போதன்றோ அறிகின்றேன்! என்னே வியப்பு? என்னை அணிசெய்துகாண அன்புறையாய்க் காதலுறையாய்ப் பூப் பாவாடையும் பூமாலையும் கொண்டுவந்து, கடவுளன்பு நிறைந்த தூய உள்ளத்தோடு மனமொத்து வாழத் தந்தாரே! என்னே உன் அருள்?" என்று பாடுகிறது, காதல் கனிந்த அவளது அருள் உள்ளம். இது வேண்டும், அது வேண்டும் எனக்கடவுளை வேண்டுவதன்று இது. நிறையுள்ளத்தில் குறையேது? ஆதலால், கடவுளைப் பாடுவதில் வஞ்சமேது? கற்பு நெறியைக் கடத்தல் ஏது?

தோழி: களவும் கற்புமாக இவ்வாறு முடிந்தபின், என்ன செய்ய விஞ்சிக் கிடக்கிறது? எங்களுக்குப் பொழுதாகிறது. (போகிறாள்; திரும்பிப் பார்த்துத் தனக்குள்) ஐயோ பாவம்! என்ன தூய அன்பு! என்ன உயர்ந்த குறிக்கோள்! தைத்திங்கள் பாவை நோன்பு இவ்விருவரையும் ஒன்றாக்கும்.

அவன்: அந்தோ ! என்ன, இவள் மனம் இரங்காதா? காதலொத்தால் போதாதா? சடங்குகள்—வீடுவிட்டு வீடு போதல் — என்ன என்ன இடையீடுகள்! பெற்றோர், பெரியோர், ஊரோர் ஒன்றாதல் வேண்டும். காதலர் ஒன்றாகாமற் போனாலும்! என்னே உலகு? எவ்வாறு இவற்றை எல்லாம் ஒன்று கூட்டுவது? அவளது

105