பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. விசுவரூப நாடகம்



1

உலகம் நம் எதிரே தோன்றுகிறது. காலையில் கடலருகே விழித்தெழுகிறோம். என்ன அழகு! செக்கச்சிவந்த செவ்வானம் கதிரவனை எதிர்கொண்டழைக்க அமைத்த தோரணக் கோலமாகக் காட்சி அளிக்கிறது. மிகப் பரந்த கடல்—அப்பாலைய கரையே தெரியாது முடிவிலாது ஓடும் கடல்—இமய மலையையே தன்னுள் மறைத்து விழுங்கிவிடக் கூடிய பேராழம் மிக்க பெருங்கடல், அதோ எதிரில் தோன்றுகிறது. அதனோடு சேர்ந்தாற்போல அதனைத் தொட்டுக்கொண்டு மேலே நீல வானம், கண்ட இடமெல்லாம் கண்குளிரக் காட்சி அளிக்கிறது. நிறை திங்கள் முற்றி நிற்கிற திருநாள் இன்று! கண்குளிரக் காணும் பைங்கதிர்ச் செல்வனாம் சந்திரன், மேலைப் புறத்தில் மறைந்துகொண்டிருக்கிறான். கீழைக் கடலின் வண்ணப் பெருமுகட்டில் உலகுக்கெல்லாம்

107