பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

வில்லையா? எத்தகைய அறிவும் அவனிடமே அவனாக முடியும். "கற்றதனா லாய பயன்என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்" என்பர் திருவள்ளுவர். எல்லா நாட்டு வேதங்களின் ஒற்றுமையும் இங்கு விளங்குகிறது.

4

ஆண்டவன் எண்வடிவினன் என்பர். இக்கொள்கை இதுவரை கூறிய உண்மையையே வற்புறுத்துகிறது எனலாம். நிலம் என்பது பிருதிவிஆம். காற்றிலலையும் கடல் என்பது அப்புவும் வாயுவும் ஆம். சுடர் என்பது சூரியனே அன்றித் தேசசும் ஆம். விசும்பு என்பது ஆகாசம் ஆம். இவ்வாறு பஞ்ச பூதமுமாய் ஆண்டவன் அமைந்துள்ளான் என்பது கூறப்பெற்றது; திங்களும் கதிரவனுமாக அவன் விளங்குகிறான் என்பதும் சுட்டப் பெற்றது. இயன்ற எல்லாம் ஆம் உயிர்வகை என்னும் இயமானனாகவும் இறைவன் நிறைந்துள்ளான் என்பதும் விளக்கப்பெற்றது. எனவே, எண்வடிவினன் என்ற உண்மை பேசப்பெற்றுள்ளது.

"எல்லாமாய் மாறி வருவனவற்றின் அடிப்படையாய் உள்ளான் அவன்" என அவனது சத்துநிலையாம் உண்மை நிலையும், அனந்தமாய் முடிவிலாது நீக்கமற நிறைகின்ற பரிபூரண நிலையும் கண்டோம். வேதமுதல்வன் என்பதனால் சித்துநிலையாம் அறிவுநிலை விளங்குகிறது. ஆனந்த நிலையாம் இன்ப நிலையையும் கூறுவதே இங்கு முடிந்த முடிவு. சத்தியம் ஞானம் அனந்தம் பிரஹ்மம் என்றும் சத்சித் ஆனந்தம் என்றும் கூறப்பெறும் உண்மைகள் இவ்வாறு இங்கே வற்புறுத்தப்பெறுகின்றன. உண்மை, எங்கும் ஒன்றாகத்தானே விளங்கும்!

116