பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

வந்து அறிவுறுத்தியதனையும் இறையனார் அகப்பொருள் உரை விரித்துக் கூறுகின்ற தன்றோ? தமிழ் நூலுலகிலும் இவ்வாறு பகலும் இரவும் மாறிமாறி வருகின்றன. சங்க காலத்திலேயே பாக்களைத் தொகுத்த காலமும் உண்டு. புலவர்கள் பெயரையும் மறந்துவிட்ட காலமும் உண்டு. விடுபாட்டுக்களாக உள்ளவையே நமக்கு அகப்படுவன. பொருட்டொடர்ச் செய்யுளாகச் சிலப்பதிகாரத்துக்கு முன் இருந்தவை காலக் கடலில் அமிழ்ந்துவிட்டன. தமிழர் வரலாற்றில் கடல்கோள்கள் பல காண்கிறோம். சம்பந்தர் பாட்டொன்றுதான் நெருப்பில் எரியாது, நீரோடு ஓடாது, பிழைத்தது என எண்ண வேண்டா; நமக்குக் கிடைத்துள்ள தமிழ்ப் பாடல்கள் எல்லாம் இவ்வாறு நெருப்பிற்கும் நீருக்கும் அழியாது நிலைநின்ற கன்னித் தமிழ்ப் பாடல்களேயாகும்.

தமிழ்க் கடலுள் ஊக்கம் என்னும் அலையோங்கிய காலத்தே சில பாடல்கள் நற்றிணையாகத் தொகுக்கப்பெற்றன. 'பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி'யே இப்பாடல்களையும் நமக்குத் தந்தவன். அதற்கு முன்னிருந்த கரிநாள்களை இந்தத் தொகை நூலே சிறிது விளக்குகின்றது. வண்ணப்புறக் கந்தரத்தனார் (71-ம் பா), மலையனார் (93-ம் பா), தனிமகனார் (153-ம் பா), விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் (242-ம் பா), தும்பிசேர் கீரனார் (277-ம் பா), தேய்புரிப் பழங்கயிற்றினார் (284-ம் பா) என்ற நற்றிணைப் புலவர்கள், நற்றிணையில் தாம் பாடிய பாடல்களில் வரும் அருந்தொடர்களால் பெயர் பெற்றவர்கள். இவர்களில், தனிமகனார், தேய்புரிப் பழங்கயிற்றினார் என்ற இருவரது இயற்பெயரை அந்த நாளைய தமிழுலகமே மறந்துவிட்டது. இத்தகைய நன்றிகெட்ட காலம்

124