பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் பேசிய நாடகம்

இடை இடையே தோன்றுவது தமிழின் தலையெழுத்து. இத்தகைய காலங்களை அடுத்தடுத்து நன்றியுள்ள மக்களும் தோன்றிவந்துள்ளார்கள்; நற்றிணை தொகுத்த காலத்து நன்றி மறவா மக்கள், அப்பாடல்களில் தம்மையும் மறந்து சுவைத்த நிலைமையால் புலவர்கள் இட்ட இலக்கியப் பெயரைக் காத்து இன்றும் நாம் உணர உணர்த்திச்சென்றார்கள்.

2

போர் நடந்த ஒரு நாட்டில், பல ஊர்கள் பாழாய்க் குடியிருப்பாரற்றுக் கிடக்கின்றன. அவற்றைக் காக்க ஒவ்வொருவர் படைமக்கள் இருப்பர். அந்தக் கொடுநிலைமையை மனத்தில் எண்ணிப் பார்க்கும்போதுதான் தனிமகனார் பாட்டின் சிறப்பும், அவர்க்குத் தனிமகனார் எனப்பெயரிட்ட தமிழ்ப் பெருமக்களின் பாட்டுணர்வும் நமக்கு நன்கு விளங்கும். தலைவன் பிரிந்தான். அவனையே எண்ணிக் கிடக்கின்றாள் தலைவி; எண்ணம் அவன் பாலதாகலின் தன் நெஞ்சம் தலைவனிடமே போய்விட்டது எனப் புலம்புகிறாள். பல வகை வளங்களும் சிறந்த பட்டினம் போன்றது தலைவியின் அழகு என்று சொல்வது பழந்தமிழ் வழக்கு. அத்தகைய பேரெழில் எல்லாம் வாடிப் பசலை பாய்ந்து அழிந்துகிடக்கும் பாழ்ம் பட்டினம்போன்றிருக்கின்றது தன் உடல் எனப் புலம்புகிறாள் தலைவி. உடம்புதான் எஞ்சிநிற்கிறது. அந்த நிலையில் பாழ்பட்ட ஊரிலே தனியே ஊர் காத்திருக்கும் படைமகன் உண்பதும் பேயுண்பதுபோலத்தானே தோன்றும்! தலைவன் இருந்தாலன்றோ விருந்து! அவ்வாறு விருந்து புறந்தருதலை இழந்த தலைவி, 'தனியுண்டல் மிக இரங்கத்தக்கது' எனப் புலம்புகிறாள். அவளுடைய நாட்டம்

125