பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் பேசிய நாடகம்

பால் ஒப்புமை வழியாக வீட்டுப்பால் கூறியதே என்று கொள்ளுவோரும் உண்டு. அன்பை வளர்த்து, உலகோடு ஒட்ட ஒழுகி, ஒன்றாய் விடுவதே நீக்கமற நிறைகின்ற பெரு வாழ்வாகும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என வாழ்வது இந்த முறையில்தான்.

இவ்வாறு, அன்பாக உலகத்தோடொட்ட ஒழுகும்போது, பிறர் செய்யும் பெருந்தீங்கையும் மறந்து வாழ்கிற நிலை வருதல் வேண்டும். பிறன் நஞ்சு வைத்தாலும், நாம் நஞ்சென உணர்ந்ததை அவன் அறியின், அவன் மனம் நடுங்கு மன்றோ என அவனுக்கிரங்கி, அந்நஞ்சையும் உண்பதே நாகரிகமாம். திருவள்ளுவர் கண்ட புது நாகரிகமாகும் ஈது:

"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்." (திருக்.580)

இக் கருத்தை அகப்பொருட் சுவைததும்ப நற்றிணைப் புலவர் ஒருவர் பொன்னேபோற் போற்றிப் பாராட்டுகின்றார். நாகரிக உலகத்தில் குழவியுலகமே தோன்றுவதும் காண்க:

"புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை
முலைவா யுறுக்கும் கைபோற் காந்தள்
குலைவாய் தோயுங் கொழுமடல் வாழை
அம்மடற் பட்ட அருவித் தீநீர்
செம்முக மந்தி ஆரும் நாட
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்
அஞ்சில் ஓதிஎன் தோழி தோள் துயில்
நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அதுநீ
என்க ணோடி அளிமதி
நின்கண் அல்லது பிறிதியாதும் இலளே" (நற்.355)

என வருதல் காண்க.

131