பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

தலைவி பாணற்கு வாயில் மறுத்தது மருதத்துக்குப் பொருந்துவதாகக் கூறவேண்டுவதை நெய்தற்குப் பொருந்தக் கூறியது காண்க. மற்றொரு பாடல் அவர் கூறும் பெண்களின் இயல்பை மிக அழகாக எடுத்துரைக்கின்றதாகலின் முழுவதும் கூறுதல் பொருத்தமாகும்.

"சிலரும் பலரும் கடைக்க ணோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப
வலந்தனென் வாழி தோழி கானற்
புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவல்
கடுமாப் பூண்ட நெடுந்தோர் கடைஇ
நடுநாள் வருஉம் இயல்தேர்க் கொண்கனொடு
செலவயர்ந் திசினால் யானே
அலர்சுமந் தொழிகஇவ் வழுங்க லூரே." (நற்.149)

இப்பாட்டு உடன்போக்குக் கூறுதலின் பாலையுரிப்பொருட்கு ஏற்ற பாலைத் தலைமகனைக் கூறுவது, கொண்கன் என நெய்தல் நிலந்தோன்றக் கூறுதல் காண்க இத்தகைய பாடல்கள் இன்னும் பல, ஆகவே, தமிழ்ப் புலவர்கள் கண்மூடிகளாய்ப் பழைய வழக்கிலே சிறைப்பட்டுக் கிடந்தவர்கள் அல்லர் என்பதனை நாம் உணர்தல் வேண்டும். இடைச் சங்கத்தில் உள்ளவர் எனக் கருதப்பெறும் தொல்காப்பியர் நற்றிணைப் புலவர்க்கு மிக மிக முந்தியவர் என்பது இதனால் வலியுறுதல் காண்க. திணைமயக்கிற் கிடமமைத்த அவரும் குருட்டு வழியை நிலை நாட்டினர் அல்லர். இடைச் சங்கம் அழிந்த காலத்திருந்தவனாக இறையனாரகப்பொருளுரை கூறும் முடத்திருமாறனுடைய பாடல்கள் இரண்டு (105, 228.) நற்றிணையில்தான் அமைந்துள்ளன. அப்பெருமையும் இத்தொகை நூற்குத்தான் பொருந்துகிறது.