பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீயோ அறிவாய்

செய்தாய்? தன்னல இன்பமே கருதி, அவளை அணைத்ததன்றி வேறென்ன எண்ணினாய்? வேறெதற்கு உருகினாய்? உடனிருந்து வாழத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனையோ?"

"இன்று அவள் நிலை என்ன? அறிவாயோ பேய் நெஞ்சே ! தோழியர்க்கும் தோன்றாத ஒளிவு ! தாயர்க்கும் தெரியாத களவு ! தன் மனத்திற்கும் தெரியாத மறைவு ! இப்படியுமா அவள் வாழ்வது ! உன்னால்—உன்னால்—உள்ளக் களங்கமில்லாத கற்புள்ளம், பொய்யுலகின் பொல்லாத இகழ்ச்சிக்கும் ஆளாகி உள்ளதே! மானமழிந்தபின் உயிர் வாழ்வரோ பெரியோர்? 'வெளியே வரலாகாது' என்று பெற்ற மனமும் இது கேட்டுக் குமுறித் தடுக்கின்றது. அவள்மேல் தவறுண்டோ? சுட்டியும் காட்டியும் பேசத் தகுந்தவளோ அவள்? ஏன் இந்த ஐயம் எழுந்தது? சிவந்த கண்களின் காட்சி கண்டு மகிழ்ந்தேன் நான் ; பழியே தின்பாருக்கு விருந்தாயிற்று அக்காட்சி! நீரில் விளையாடிச் சிவந்த கண்களைக் கள்ளக் காதலனோடு கலந்து களித்துச் சிவந்த கண்கள் என்று பாழுலகம் பழி தூற்றியதோ? ஐயோ! பழியைக் கேட்டாளோ தாய்? ஐயந்தான் கொண்டாளோ? அன்புச் சமுதாயத்தை எவ்வாறெல்லாம் சிதறத் தகர்த்துள்ளேன், ஏ நெஞ்சே ! அவள் போனபின் இத்தனையும் நினைக்கின்ற நின் அறிவே அறிவு!

"என்னையே அறிந்து அவளை அறியாமல் இருந்த நான், தன்னையே மறந்து அவளையே அறிந்த அவளுடைய உயிர்த்தோழி கூறியதையும் உணராமற் போனேன். என்ன அறியாமை! அத் தோழியைப் பார்த்து 'நீ அறியாய் அவளை; நான் அறிவேன்' என்று இடித்துரைத்தேனே!

7