பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீயோ அறிவாய்

இன்று அறிந்ததுபோல் என்றும் அவன் அறிந்ததில்லை. முன்போல் அவளது அன்பு கற்கண்டாய்க் கடையில் இல்லை; வாயில் வந்து இனிக்கின்றது. அவளது அன்புருவம் அன்பாய் நெகிழ்ந்து பாய்கிறது. தன்னை மறக்கின்றான்; அவளே ஆகிறான். அன்பு கண்கொண்டு காணும் அறிவே உண்மை அறிவு, மெய்யுணர்வு என்பது அவனுக்கு விளங்குகிறது. இன்று தன்னலமிழந்து அவள் வடிவமாகவே மாறுகிறான்; அவளாவுகின்றான்; புதியவனாய்ப் புத்துயிர் பெற்றுப் புத்துலகில் வாழ்கிறான்.

இந்தக் கதையினை 12 வரியில் பாடுகிறார் பெருங்கௌசிகனார் என்ற புலவர்:

பொருவில் ஆயமோடு அருவி ஆடி
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக்கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி
மனைவயிற் பெயர்ந்த காலை நினைஇய
நினக்கோ அறியுநள் நெஞ்சே புனத்த
நீடுஇலை விளைதினைக் கொடுங்கால் நிமிரக்
கொழுங்குரல் கோடல் கண்ணிச் செழும்பல்
பல்கிளைக் குறவர் அல்குஅயர் குன்றில்
குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய
பன்மர உயர்சினை மின்மினி விளக்கத்துச்
செல்மழை இயக்கம் காணும்
நல்மலை நாடன் காதல் மகளே !

—நற்றிணை 44.

[ஆயம் — தோழியர் கூட்டம்; முறுவல் — புன்சிரிப்பு; கொடுங்கால் — வளைந்த தாள்; குரல் — கதிர் : ஆசினி — பலா ; படப்பை — தோட்டம்.]

13