பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

யாடுகின்றார். 'ஆமாம், நீங்களே இந்த மனிதப் பிறப்பைப் பாராட்டவேண்டும்! குரங்குக்குத் தம்பியும் தங்கையும் தாம் இவர்கள். நப்புன்னையின் சிறப்பை இவர்கள் உணரவேண்டும்,' என்கின்றார் வள்ளி அம்மையார். 'ஆம்; அப்படி உணருமாறு இதுவரை நீ ஒன்றும் செய்யவில்லையே! குழந்தைகளே! இனிமேல் நப்புன்னை அக்காளைச் சுற்றித்தான் நீங்கள் விளையாடவேண்டும். நான் அங்கே கொடிகளைப் பரப்பிவிட்டு வீடுபோலச் செய்துவிடுகின்றேன். அந்தக் கொடி வீட்டில் போய் விளையாடுங்கள்' என்று முருகனார் தட்டிக்கொடுக்கின்றார். 'நப்புன்னை எப்படியப்பா அக்காள்?' என்று அயல் வீட்டுக் கொற்றன் கேட்கிறான். பக்கத்தில் இருந்த சாத்தன் 'அதுவா? எங்கள் அம்மா சொன்னார்கள். சொல்லட்டுமா? அப்படியே ஒப்புவிக்கும்படி அம்மா சொன்னார்கள் கேள்' என்று சொல்லத் தொடங்குகின்றான்:

3

"'பொழுது புலர்கிறது; செவ்வானம் பரவுகிறது. கதிரவனும் காட்சி அளிக்கின்றான். இருளில் மங்கிக்கிடந்த ஊரும், பல நிறமும் பல வடிவமும் பெற்றுத்தோன்றுகிறது. ஒருபுறம் பச்சைப்பசேர் என்ற வயல்கள்! ஒரு புறம் வானை நோக்கி எழுந்த வீடுகள் நிறைந்த தோட்டங்கள்! ஒரு வீடு மிக உயர்ந்த எழுநிலை மாடமாகச் செருக்கிக்கிடக்கிறது. அஃது அந்த ஊருக்குத் தலைவர் வீடு என்பது சொல்லாமலே விளங்குகிறது. அந்த வீட்டிலிருந்து ஒரு பெண் ஓடோடியும் தோட்டத்திற்குள் வருகிறாள். அவள் தலைவரின் பெண்தான்; தலை மயிர் கூந்தலாக நீண்டு வளராத சிறுமி; தலை மயிர் அலைய ஓடிவருகிறாள். செல்வப் பொலிவெல்லாம்

20