பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நப்புன்னை

உடையில் விளங்குகிறது. மனித இயற்கையின் அழகெல்லாம் அவள் நடையில் விளங்குகிறது.

"'புதிய நாள் விடிகிறது; புத்துணர்ச்சி பிறக்கிறது அவள் பார்வையும் உடல் துடிப்பும் இயற்கையோடு இயற்கையாக ஈடுபட்டிருப்பதைத் தெரிவிக்கின்றன. 'உலகுக்கு ஒரு கண்ணே, ஒளிவிளக்கே, ஓடிவா! செக்கச் சிவந்த பழமென்றே தெரிகிறாய்! கரகர என்றே கடுகவே ஓடிவா!' என்று பாடிக்கொண்டே கலகல என்று இவள் சிரிக்கின்றாள். பறவைகள் பலவகையான பண் ஒலிகளை எழுப்பிச் சிற்றஞ் சிறுகாலே இசையரங்கம் நடத்துகின்றன. பறவைகளோடு பறவையாய் இவளும் பாடுகின்றாள்; ஆடுகின்றாள்;

'தேங்குயிலே நின்பாடல் மாம்பழமோ தீம்பாலோ
பச்சைக் கிளியேநீ கொச்சைமொழி பகர்கின்றாய்
ஆடுவோம் வாமயிலே ஆண்டவனைத் தேடுவோம்'

என்று தலையை வளைத்தும், இடுப்பினை ஒடித்தும், கையை அபிநயம் பிடித்தும் ஒய்யாரமாக நடக்கின்றாள்; நடக்கிறபொழுது அந்தத் தோட்டத்துச் செடிகளும் காலிற் சிக்குகின்றன; 'உன்னோடு விளையாடவேண்டும் என்று என்னைப் பிடித்து இழுக்கிறாயா? இரு, இரு! இதோ வருகிறேன்' என்று பழைய கூட்டாளியிடம் பேசுவது போலப் பேசுகிறாள். மரங்களின் தளிர்கள்—தாழ இருப்பன—இவள் உடலைத் தடவிக்கொடுக்கின்றன. மலர்கள் இவள் தலைக்குள் பட்டு விழுகின்றன. 'தடவிக் கொடுக்கும் தாயே! பூமுடிக்கும் செவிலியே!' என்று இவள் கூறிக் கள்ளமில்லாத சிரிப்பு முகமெல்லாம் மலரச் சிரித்துப் போகின்றாள்.

21