பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

"'காலைக் காற்றில் தூய சிறு அலைபோல இவளுடைய பாட்டு மெல்லப் பரவுகிறது; தொலைவில் உள்ள வானகத்துப் பாட்டுப்போலக் கேட்கிறது. அண்டை அயல் வீட்டில் உள்ள சிறுமிகள் இவளை நோக்கி ஓடி வருகின்றார்கள்:

"'வள்ளி! வள்ளி!' என்று அழைத்துக்கொண்டே வந்து இவளைச் சூழ்ந்து மொய்த்துக்கொள்கிறார்கள். இவள்தான் உடம்பு. அவர்கள் தாம் உறுப்புக்கள். இப்படி இயற்கையாக அமைந்ததுபோல இவளோடு ஒன்றாய்ப் பாடுகிறார்கள் ; ஆடுகிறார்கள். செவ்வானம்—செவ்வானத்தில் செங்கதிரோன்—செங்கதிரோனில் சிவந்து மின்னும் மேகங்கள்—இவற்றினைக் கண்டுகளித்துப் பேசிச் சிவந்த மூக்கிற் பழுத்த கிளிகள்—கிளிகள் கொத்தித்தின்னும் செக்கச் சிவந்த ஆலம் பழங்கள்—ஆலமரத்தின் அடியில் சிவந்து பட்டாடை உடுத்தி ஆடும் சிறுமிகள்—அவர்கள் பாடும் செந்தமிழ்ப்பாடல்கள்—அனைத்தும் ஒன்றாய் இயைந்து அவர்கள் பாடும் பாடல்—' செக்கச் சிவந்த செல்வா! செந்தில்வரும் முருகோனே!' என்பதில் முடிகிறது.

"'முருகன் என்பது இந்த வள்ளியின் அத்தை மகன். இதோ அவன் வருகின்றான்: அதனால் தான் சிறுமியர் அப்படிப் பாடுகின்றனர்.

"'வள்ளி! இன்றைக்கு ஒரு புதிய விளையாட்டு ஆடவேண்டும்' என்கின்றனர் சிறுமியர். வானத்தில் சிறிய கருமேகங்கள் பரவுகின்றன ; கதிரவன் அவற்றில் மறைந்து மறைந்து வருவது போலத் தோன்றுகின்றான். 'கதிரவன் கண்ணாமூச்சி விளையாடுகிறான்: நாமும் விளை-

22