பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நப்புன்னை

" 'சிறுமியர் இரண்டு கூட்டமாகப் பிரிகின்றனர். வள்ளி மாஞ்சிவப்பு நிறம் ஆதலின், தாயார் கூட்டத்தைச் சேருகின்றாள்; தன்னுடைய நப்புன்னையைத் தோழியிடம் கொடுத்துவிட்டுக் கண்ணை மூடிக்கொள்கிறாள். இப்படியே மற்றவர்களும் செய்கின்றார்கள். தோழியர் கொட்டைகளைத் தனித்தனியே புதைத்து மணலைக் குவித்துவைக்கின்றனர்.

" 'வானத்திலே பரவிய கரியமேகம் இருட்டைத் திணித்தாற்போல ஆகிவிடுகிறது. தோழிக் கூட்டம் 'குவால், குவால்' என்று கூவத் தொடங்கும்போது, திடீர் எனப்பெருமழை கறக்கிறது. வீட்டிலிருந்து தாய்மார், 'வள்ளி! நக்கண்ணை! நச்செள்ளை!....ஓடிவாருங்கள்; வீட்டிற்குள் வந்துவிடுங்கள்; மழையில் நனையவேண்டாம்: வாருங்கள்; வாருங்கள்' என்று கதறுகின்றனர். சிறுமியர் தத்தம் வீட்டிற்கு ஓடிவிடுகின்றனர். வள்ளியும் முருகனோடு வீட்டிற்குள் புகுகின்றாள். ஆனால், இவள் மனம் தோட்டத்திலே நப்புன்னையின்மேல்தான் ஓடுகின்றது. 'ஐயோ என்னுடைய நப்புன்னை எப்படி ஆகுமோ? அத்தான், நீங்கள் தேடிக் கொண்டுவந்த தாயிற்றே! நன்றாய் உருண்டையாய் இருந்ததே! பாவம்! பாப்பா என்ன ஆகுமோ? பாழும் மழை தலைகாட்ட முடியாதபடி பெய்கிறதே!' என்று இவள் கண் கலங்கிநிற்கிறாள்!.

" 'கோடைமழை விடாமல் பெய்கிறது. இரண்டு நாட்கள் இப்படிக் கழிகின்றன. மூன்றாம் நாள் பெருமழை இல்லை. இருந்தாலும் வெளியே வந்துவிடுவதற்கு இல்லை. இப்படி மேலும் இரண்டுநாட்கள் செல்லுகின்றன. மழை விட்டாலும் தூவானம் விடவில்லை. மறுநாள் வானம்

25