பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நப்புன்னை

காட்டுகிறான்; உடனே மணலைத் தள்ளி மூடிவிடுகிறான் 'வள்ளி! உனக்குத்தான் திருத் தாய்ப் பட்டம் சூட்ட வேண்டும்! உன் பாப்பாத்தான் கல்வி யம்மா! என்ன அறிவு! அம்மாவைத் தேடிக்கொண்டு மணலுக்கு உள்ளிருந்து மேலே வந்துவிட்டது. அதன் அறிவே அறிவு!' என்று சிறுமியர் புகழ்கின்றனர்.

" 'திருத் தாயாருக்கு மாலை சூட்ட மாலை இல்லையே!' என்கின்றாள் ஒரு சிறுமி. முருகன், தான் மூடிவைத்திருந்த முல்லை மாலையைத் திறந்துகாட்டுகிறான். 'கொட்டைப் பாப்பாவைக் கொண்டு வந்தவரும் அத்தான்; விளையாடக் கற்பித்தவரும் அத்தான்; பாப்பா வளர்ந்திருப்பதனைக் காட்டிக்கொடுத்தவரும் அத்தான்; ஆகையால், அவரே மாலை இடவேண்டும்' என்று எல்லாச் சிறுமியரும் ஒருவர்முன் ஒருவர் பேச முந்தி இரைகின்றனர். இந்தப் பேரிரைச்சலைக் கேட்டு வீட்டிலுள்ளவர்கள் ஓடிவருகின்றனர். என்ன காண்கின்றனர்? முருகன் வள்ளிக்கு மாலை சூட்டுகின்றான். 'திருத்தாய் வாழ்க! என்று சிறுமியர் வானத்திலும் கேட்க வாழ்த்துகின்றனர்.

" 'பெற்றோர் திருமணம் செய்வதற்கு முன்னரே இவர்கள் மணந்துகொண்டனரா?' என்கின்றாள் அண்டை வீட்டுப் பாட்டி. அந்த வீட்டுச் சிறுமி நடந்ததனை விளக்கிவைக்கின்றாள். எல்லோரும் பிள்ளைமை விளையாட்டில் இன்புறுகின்றனர். வள்ளி, தன் தாயைப் பார்த்துச் சிரிக்கிறாள். முருகனும் தன் தாயைப் பார்த்துச்சிரிக்கிறான். 'அம்மா! வள்ளிப் பாப்பாவைப் பார்க்கும் போதெல்லாம் உங்கள்மேல் அன்பு பொங்குகிறது' என்று அப்பாவிடம் சொன்னீர்களே! நினைவு இருக்-

27