பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எல்லாம் அவளுக்கே

முன் கையைக் கவ்விக்கொண்டு கிடக்கின்றன. அவற்றோடு அழகுக்கு அழகு செய்ய—அவற்றோடு பட்டு, உராய்ந்து, ஒலித்துப் பாட, வளைகள் புதுமையாக வந்துள்ளன. அதோ பளபளப்பான வெள்ளிய வளைகள்! அவை சங்கு வளைகள்தாம். அவற்றின் வட்ட வடிவு ஓர் அழகு! என்ன அழகிய திரட்சி! என்ன உருட்டு! என்ன வேலைப்பாடு! இருந்தும், என்ன வன்மை! கலைஞன் கலை எல்லாம் கைத்திறமாக வளையிற் பொலிகிறது: வளையைத்தான் அராவினானா? கருத்தைத்தான் அராவினானா? இவ்வாறு கலையாய்ப் பதிய, உயிரில்லாத பொருள் உயிர் பெற்றுப் பேசுகிறது! காதலாகக் கொஞ்சுகிறது!

"ஆனால், பார்த்ததுபோல் இருக்கிறதே! எங்கே பார்த்தேன், இந்த வளைகளை?"

9

அவன் நினைத்துப்பார்க்கிறான். கண்டதும் காதல் கொண்ட அவன், அன்றிரவெல்லாம் அவ்விடமே அலைந்து திரிந்தமை நினைவிற்கு வருகிறது. அப்போது கண்ட காட்சி........

சில குடியிருப்புக்கள்—அங்கும் இங்கும் சில தோட்டவீடுகள்—அவ்வளவே! அவனுடைய ஊர்போலப் பெரியதன்று, அவள் வாழும் இடம்; சிறிய ஊர் ; சில வீடுகள் சேர்ந்த சேரி. ஆனால், என்ன இயற்கை வளம்! உழைப்புக்குப் பரிசிலா இந்த வளம்? இல்லை. தூய அறவாழ்வுக்குப் பரிசில். அவளை அறியானா அவன்? தூய்மையே அவள் உயிர்; அறமே அவள் வடிவம். கற்பினைக் கடவுளே காக்கும் இயற்கையே இவ்வாறு போற்றுகிறது.

41