பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

என்ன இயற்கை விருந்து! இயற்கையும் இந்தக் குறவருமாய் இயைந்த இயைபே இயைபு! இது குன்றுகள் நிறைந்த குறிச்சி. ஒரு பெரிய மலை தோன்றுகிறது! என்ன ஒலி அஃது? ஆம்! அருவி வீழ்கிறது. இருளில் ஒரே வெண்மை நிறமாகத் தோன்றுகிறது. அது தண்ணீரால் தழைத்ததா? மழை வளம் தரும் கற்பால் தழைத்ததா? அழகிய அருவி! தாலாட்டுப் பாடுவதுபோல ஒரே பண்ணில், தொலைவில், மெல்லப் பாடுகிறது. அதன் எதிரேதான் இருக்கிறது அந்தச் சேரி. சேரிப் புறத்தே திரிகிறான் அவன்; அங்கு ஓர் அன்புக் குடும்பம்...சிறு குடும்பம்...காண்கிறான். மனைவியும் மணாளனும் வாழும் வாழ்வு...கவலையற்ற வாழ்வு...உழாத உழவு...ஆனால், இன்ப விளைவு...இவை தோன்றுகின்றன. இயற்கையன்னையே தன் புதல்வனுக்கும் புதல்விக்கும் ஊட்டுகிறாள். வீட்டின் முற்றத்தில் காதலர் வீற்றிருக்கின்றனர். வானமே மீன் விளக்குப் பொலியும் மேற்கட்டி; மரச்செறிவே மண்டபம் ; சுற்றியும் பலா மரங்கள், செக்கச்சிவந்த வேரோடி நிற்கின்றன. கிளைதோறும் பலாப் பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன. பறித்து எடுத்து இவர்களுக்கு ஊட்டவேண்டும் போலும்! பழம் பழுத்து வெடிக்கிறது. சுளைகள் காதலர் கையில் விழுவதற்காகப் போட்டி இடுகின்றன; பல தோற்கின்றன; கீழே விழுந்துகிடக்கின்றன. முற்றம் நிறையப் பலாச்சுளை! கனிந்தசுளை! தேன் சொட்டும் சுளை! எங்கும் பலாவின் நறுமணம்! அருவியின் வெள்ளைக் காட்சியாம் விருந்து! அதன் தாலாட்டின் செவி விருந்து! பலாவின் சுவை விருந்து! நறுமண விருந்து! மனைவியைத் தழுவியபின் உடலும் உள்ளமும் உயிரும் குளிர்ந்துள்ளன. கணவன்

42