பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

வீசும் உங்கள் தலையோடு உறவு கொண்டாடும் தலையணையே அறியும்: பிறர் அறியார். ஆனால், நான் அறிவேன்."

திங்கள் மேகத்திற்குள் ஓடி மறைகிறான். நிழல் பரவுகிறது. தலைவி பெருமூச்சு விடுகின்றாள்: "ஆம், எத்தனை ஏழைகள்? எத்தனை அகதிகள்? கண்டுகண்டு என்மனமும் கல்லாய்விட்டது" என்கிறாள்.

"பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அருள் வாழ்வுக்கும் பொருள் வேண்டும். உன் மனம்போல அவர் மனமும் புழுங்குவதால் அன்றோ, அவரும் பொருள் தேடச் செல்கின்றார்! உன்னைப் பிரிந்துபோவதே பெருவருத்தம். புண்ணில் வேல் எறிவது போல அதற்குமேல் நீயும் அவர் போவதைத் தடுப்பதுபோல நடுநடுங்கி நின்றால், அவர் மனம் என்ன ஆகும்? ஆண்மை எல்லாம், அன்பு அழுகைமுன், குழைந்து செயலற்றுநிற்கும்.

"அவர் பேச்சுக்கு மறு பேச்சு உண்டா?"

பேச்சைவிடப் பேராற்றல் படைத்தது பெண்கள் அழுகை. "நான் அழவேண்டும் என எண்ணவே இல்லை; தூங்கவே எண்ணினேன். ஆனால், இரவெல்லாம் அவர் செல்லப்போகும் காட்டின் கொடுமையே கண்ணெதிர் சுழன்றுகொண்டிருந்தது. அதனைக் கண்டபின், எப்படி என் மனம் துணியும்? என்னையும் அறியாமல் அலறினேன். தம்மைப் பேணிக்கொள்ள அறியாதவர் அவர்; தாய்போல நான் அவரை ஆட்டிப்படைக்கிறேன்' என்பார். தண்ணீரும் இல்லாவிடத்தில் தத்தளிப்பதா, அந்தக் குழந்தை உள்ளம்? என்ன வெப்பம்! என்ன பாறை! என்ன காடு!"

50