பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

கிறது. புழுதி எல்லாம் உதைக்கு எதிருதைபோலக் 'குப்'பென்று மேலே கிளம்புகிறது; யானையின் மேலே மூடிக்கொள்கிறது. சிறிது நேரம் யானையே தோன்றவில்லை. சிவபெருமான் சாம்பலில் பண்டரங்கக் கூத்தாடி வெண்பொடி மூழ்கி நிற்பதுபோலப் புழுதியாடி நிற்கிறது யானை. அந்தோ ! தண்ணீராட விரும்பும் யானை இவ்வாறு வெள்ளைச் சுடு நீறாடி வருந்துகிறது.

"இப்படிப் பாலைவனத்தின் அருவழியில் முடிவிலாது சென்று அலைந்து வருந்தும் வருத்தம் எல்லாம் தணியும் நாள் என்றோ? நல்ல காலம்! பாறைகள் மலிந்த இடம் ஒன்று தோன்றுகின்றது. எதிர்பாராத காட்சி ! கல்லில் தண்ணீர்! ஆம், அதோ சிறிய கூவல் ! சிறு குழி ! ஆனால், வற்றாத நீர் நிலை! ஊற்றுப் பெருகிக்கொண்டே இருக்கும் கூவல்! இதனைக் காண்கிறது யானை; தண்ணீரைத் துதிக்கையில் உறிஞ்சி உறிஞ்சி உடல்மேல் ஊற்றிக்கொள்கிறது; வருந்திய வருத்தமெல்லாம் மெல்ல மெல்லத் தணிகிறது; உடலும் தூயதாகின்றது; நீர் வேட்கையும் தணிகிறது.

"யானையும் வருந்தும் இத்தகைய காட்டில் அவர் நெடுந்தொலைவு செல்லவேண்டும் அன்றோ? எத்தனை வருத்தம்! இன்பமாக இங்கு வாழ்ந்தவர் எவ்வாறு வருந்துவார் ! எத்தனை நாள்! எத்துணைத் தொலைவு! இந்தக் காடுதானே நீ கூறியது? இதில் அவர் நடந்து வருந்தி அலைவதுபோலக் கனாக் கண்டு அலறினேன்; நடுங்கினேன்! வயிறெல்லாம் பற்றி எரிகிறதே!" என்று கூறி முடிக்கின்றாள் அவள்.

52