பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

ஆனால், என்ன உணவு தருவது? யார் உணவு அமைப்பார்? பொருள்களும் கையில் இல்லை. எப்படி அவளிடம் கூறுவது?" வாடுகிறான். மனம் அலைகிறது. "வேலை செய்தறியா அவள் என்ன செய்வாள்? நான் சென்று ஏதேனும் உணவமைக்கலாமா?"—இவ்வாறு எண்ணிக்கொண்டே அடுப்பங்கரைக்கு வருகிறான் தலைவன். அடுப்பின் ஒளியில் தலைவியணிந்திருந்த மணியாரம் பளிச்சென்று ஒளிர்கிறது: இவன் காணாத காட்சி. எதிரே குறுகுறு நடந்து, பெருமூச்சு விட்டு, நெற்றி வேர்வை நிலத்தில்விழ வருகிறாள் தலைவி. இரைத்துக் கொண்டு வருவது கண்டு அவன் நடுங்குகிறான். இடிமேல் இடிபோல் தோன்றுகிறது. “கண்ணே, உடம்புக்கு என்ன?" என்று நைகிறான்.

"உடம்புக்கா! எனக்கு என்ன? தங்கள் ஆசிரியர் வந்திருக்கிறாரே, பார்த்தீர்களா? அவருக்குக் கடம்பமான் இறைச்சியை நெய்யிலிட்டுச் சோறு சமைத்து வைத்துவிட்டு வருகிறேன். பாலும் பழமும் உண்டு. 'போதுமல்லவா? பாவம் அவர் பட்டினிபோலும்! 'விரைந்து உண்ணலாம்; குளிக்கலாம்' என்று புத்தாடை கொண்டுவைத்தேன். நீங்கள் வரவேண்டும் என்றார்."

"என்ன! எப்படி என் ஆசிரியர் என்று உணர்ந்தாய்? அதுதான் அவர் உன்னைப் புகழ்கிறார்! இதற்குள்ளாகவா சமையலாய்விட்டது? நீயா செய்தாய்? என்ன வியர்வை? என்ன இரைப்பு ? புகையில் புழுங்கினாயா? அதோ கரி."

"கரியா? அடுப்பங்கரையில் கரியிராதா ? புகையிராதா?" "ஆனால், புகையில் புழுங்குவானேன்?" "என்ன அழகு! ஆம், புகையே பேர் அழகு ! என்ன அழகிய

60