பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

பாம்பு தன் படத்தை விரித்துக் கொட்டாவி கொண்டால் அன்னவாக முகை நெகிழ்ந்து பின்பு அலர்ந்தன" என்பது அதற்கு நச்சினார்க்கினியர் கண்ட உரை. இதனை அதிவீரராம பாண்டியர், “பாம்பு பைத்து ஆவித்தென்னமென் காந்தள் பருமுகை அவிழ்ந்து" என்று பொன்னேபோலப் போற்றி ஆள்கின்றார். இவற்றிற்கு எல்லாம் ஊற்று நாம் ஆராயும் பாடல்தான். நிற்க.

பாம்புபோலத் தொலைவில் காட்சியளிக்கும் இந்தக் காந்தளிடையே தொங்கும் வாயான தும்பிக்கையையே சிறப்பிலக்கணமாகக் கொண்ட, தன் காதலனான, ஆண்யானை (ஞால்வாய்க் களிறு) செல்கின்றதனை அதன் பெண் யானையாம் பிடி காண்கின்றது. அந்தக் காந்தளஞ்சாரலில் தும்பிக்கை தோன்றுகிறது. (பாந்தட் பட்டென) பாம்பிடையே தன் காதலன் சிக்கியதாகப் பிடி எண்ணிவிடுகிறது. அதன் கவலைக்கு அளவு உண்டா? முடிவு உண்டா? இந்தத் துஞ்சாத் துயரத்தால, காதற்பிடி அலறுகிறது; அஞ்சிக் குமுறுகிறது; கலங்கிப் பிளிறுகிறது. இது பெரியதொரு பூசல்; ஆரவாரம். மலையும் காடும் இதனோடு ஒரு குரலாகப் புலம்பிப் பிளிறுவன போலத் தோன்றுகின்றன. நீண்ட மலையில் உள்ள பிளப்புக்களாம் குகைளில், இந்த ஒலி சென்றதும், எதிரொலியாகத் திரும்புகிறது. இடி தொடர்ந்து இடிப்பது போல, இவ் வெதிர் ஒலிகள் பல பல எதிர் ஒலிகளாய்த் தொடர்ந்து பிளிறுகின்றன.

"அஞ்சு பிடிப்பூசல் நெடுவரை விடரகத் தியம்பும் காடு இவர் சென்ற காடு, இதனைக் கடந்து பொருள் தேடச்சென்றார் காதலர்; இக் காட்சியைக் கண்டிருப்பார்; ஆதலின், வந்து தலையளி செய்வார்; நல்குவர்" என்கிறாள்

78