பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

யிடையே கெம்பினை இழைத்தாற்போல என்ன அழகு! நெய் தடவிவிட்டாற் போன்ற தளிர்களின் மினுமினுப்பு! மனத்தை உருக்கும் துவளல்! இந்த மென்மையும், மணமும், நிறமும், வடிவும், இனிமையும் எப்படிப்பரந்தனவோ! வியத்தகு அழகு! என்ன குளிர்ச்சி! என்ன புதுமணம்!

தலைவி: ஆற்றங்கரைப் படுகையில் உள்ள மரங்கள் அல்லவா? ஆற்றின் ஊட்டம் உள்ளூறப் பொலிகிறது. கொண்டான் வலமிருந்தால் கூரை ஏறிச் சண்டை போடலாம். வானத்தையும் இம் மரங்கள் எட்டப் பார்க்கின்றன. உள்ளே உள்ளது வெளியே தோன்றுகிறது. நாம் எங்கே தழைப்பது? நாமோ வேரற்ற, நீரற்ற வற்றல் மரம்.

தோழி: தழைக்கவேண்டும் நாளில், வாடி வதங்குவானேன்? பாடி மகிழ வேண்டும் நாளில், பழித்து வருந்துவானேன்? இத்தகைய இளவேனிற் காலமே ஓரறிவுயிரையும் உள்ளூற ஆற்று நீரோடு கூட்டுவித்துத் தழைக்கச் செய்கின்றது. காலத்தின் கோலம்—கேட்டாயா அப்பாட்டை! இதுவரையில் நம்மைப் போலவே வாயடைபட்ட குயில் இதோ பாடுகிறது! குயில் எங்கே எனப் பார்க்கிறாயா? பச்சையின் நடுவே தெரியவில்லை! அதோ! அதோ! காற்றசைந்ததும் அந்தத் தளிரின் இடையே கருமணிக் கொத்துப்போலக் கருங்குயில் தோன்றுகிறது பார்! என்ன கறுப்பு! கறுப்பிலும் ஓர் அழகு காட்டுகிறது இந்தக் காலம்! உன்னைத்தான் இதோ அது பார்க்கிறது! செக்கச் சிவந்திருக்கும் கண்கள், கருமைக்கிடையே பளிச்சென்று தோன்றுகின்றன. கரும் பச்சையிடையே செந்தளிர்—கருமையிடையே

84