பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

தோழி: நிலைத் திணையுயிரையும் இயங்கு திணையுயிரையும் இப்படி ஒரு புரட்சி செய்து இன்பமூட்டும் இளவேனிற் காலம் நமக்குமட்டும் இன்பமூட்டாது ஒழியுமா?

தலைவி: கொண்டான் வலமிருந்தால் அன்றோ?

தோழி: கேட்டேன் உன் பல்லவியை! அவருக்கும் இன்ப இளவேனிற் காலம் நம்மை நினைப்பூட்டாதா? அவர்மட்டும் தனியிருப்பாரா ? வருவார்.

தலைவி: வருவார்! வருவார்! மனப்பால் குடி! தம்மைவிட்டுப் பிரியாத நம் இயல்பு அறிந்திருந்தும் பிரிந்திருப்பாரா? பிரியேன் என்ற சொல்லும் தவறினர். முதற் கோணல் முற்றுங் கோணல்-பிரிந்தாலும் அகன்று போவாரா? அகன்றவர் அகன்றேவிட்டார்.

தோழி: அப்படிச் சொல்லலாமா?

தலைவி: பின்னே என்ன? பழமையை நினைக்கிறாயோ? "என் உயிரே" என்று பேசியது ஒரு காலத்துப் பேச்சு, பொருளே அவருக்கு இன்று உயிர்...பெண்ணாயிருந்த உயிர், அன்று அன்பாய்க் குழைந்தது. பொன்னாயிருக்கும் உயிர் அன்பாய்க் குழையுமா? இன்று தீயாகவே உருகும்.

தோழி: மரந்தழைய நீர் வேண்டும் என இந்த இளமரப் பூங்காவே எடுத்துரைக்கவில்லையா? குடி தழைக்கப் பொருள் வேண்டாவா? பொருளில் பூப்பதே இன்பம்.

தலைவி: வெறும் பொருள் வெந்துருகும்; பூவாது. அருளாய் மாறினால்மட்டும் பொன் பூத்த மரமாய்ப் புகழ் மணங் கமழ்ந்து இன்பம் கனியும்.

86