பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவத்தைக் கட்டிக்கொள்கிறாள்!

தோழி: பொன் காத்த பூதமாகவா பொருள் நாடினார்? குடி வாழக்கிளை வாழக் குன்றி வந்து இரப்பார் வாழ உன் குறைமனம் நிறையவே அன்றோ பொருள் தேடச்சென்றார்?

தலைவி: அதனாலேயே பொறுத்திருந்தேன். அருள் உலர்ந்தது. தொலைவில் உள்ளார் என்பதன்று துன்பம். நீர்ப்பசை நெடுந்தூரத்திருந்தும் வரவில்லையா இதோ அந்த மரத்திற்கு? நமக்கெங்கே நீர்ப்பசை? அன்புறவே அற்றுப் போயிற்று.

தோழி: இளவேனிற் காலத்தின் பெருமையைக் கண்டு உணர்ந்தும் இப்படிக் கதறலாமா?

தலைவி: இளவேனிற் காலத்தின் பெருமையை உணர்ந்தே பேசுகிறேன். வேங்கொம்பைப் பூங்கொம்பாக்கி, அதில் பூங்குயில்கள் புகுந்து பாடச் செய்யும் இளவேனில் தெய்வத்தின் பெருமையை எண்ணவும் முடியாது! காதற் கடவுளின் கருணை பொழியும் கை அது.

தோழி: பின் ஏன் கவலை?

தலைவி: வருவார் வருவார் என்று நானும் எண்ணினேன். எண்ணாததெல்லாம் எண்ணியது என் நெஞ்சம்: கோடியும் அல்ல பல. கொத்துக் கொத்தாய் மலர்ந்தன இன்ப எண்ணங்கள். அவர் வருவதுபோல, வந்தணைப்பது போல, நான் ஊடுவது போல, ஊடலைத் தணிப்பது போல, இல்லறம் தழைப்பது போல, பலப்பலர் வந்து விருந்துண்பது போல, வறியவர் வறுமை வாட்டம் தீர்வது போல, நோயினர் மருந்துண்டு வாழ்வது போல, உலகம் இவர் காவலில் உவந்தொளிர்வது போல, துன்பம் துடைப்பது போல, அற இன்ப-

87