பக்கம்:நற்றிணை 1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

127


அலரினைத் தலைவனோடு நிகழ்வதான ஊரறி மணவிழாவின் வருகையானது போக்கி, நல்லதோர் இல்லற வாழ்விலே அவர்களை இணைக்கும் என்பதாம். இதனால், வரைந்துவரின் தமர் மறாது உடன்படுதலையும் குறிப்பாகக் கூறினளாம்.

64. நினைவு ஒழிக!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : குறிஞ்சி.
துறை : பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது.

[(து–வி.) தலைவனது பிரிவினாலே, தலைவியின் துன்பம் மிகுதிப்பட்டு, . அவளது நிலை நாளுக்குநாள் கவலைப்படத் தக்கவிதமாகப் போய்க் கொண்டிருக்கிறது. தோழி, 'தலைவனுக்குத் தூது அனுப்பியாவது நினது துயரத்தைமாற்ற முயலுவேன்' என்கின்றாள். அதனைக் கேட்டதும், அவளுக்குத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

என்னர் ஆயினும் இனிநினைவு ஒழிக!
அன்ன வாக இனையல் தோழியாம்
இன்ன மாகநத் துறந்தோர் நட்புஎவன்?
மரல்நார் உடுக்கை மலையுறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் 5
வறனுற்று ஆர முடுக்கிப் பையென
மரம்வறி தாகச் சேர்ந்துஉக் காங்கென்
அறிவும் உள்ளமும் அவர்வயின் சென்றென,
வறிதால், இகுளைஎன் யாக்கை; இனியவர்
வரினும், நோய்மருந்து அல்லர்; வாராது 10
அவணர் ஆகுக, காதலர்! இவண்டும்
காமம் படர்அட வருந்திய
நோய்மலி வருத்தம் காணன்மார் எமரே!

தோழி! நம் தலைவராகிய அவர்தான் எத்தகைய நிலையினராயினும், இனிமேல் – அவரது நினைவானது நம்மிடமிருந்தும் ஒழிந்துபோவதாக! அஃதன்றி, அவருக்குத் தூதுவிடுத்து உரைப்போமா என்னும் இவைபோல்வன பற்றி எண்ணி வருந்தாதிருப்பாயாக! யாம் இத்தன்மையேமாக, நம்மைக் கைவிட்டு அகன்றாரது நட்புத்தான். 'இனி நமக்கு எதற்காகவோ? மரற்கள்ளியது நாரினாலே பின்னப்பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/128&oldid=1677464" இலிருந்து மீள்விக்கப்பட்டது