பக்கம்:நற்றிணை 1.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

131


'கிடங்கில்' ஓய்மான் நல்லியக் கோடனின் ஊரும் ஆகும்.'கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்' என்னும் சான்றோர், நற்றிணை 364 ஆவது செய்யுளைப் பாடியவர். 'கிடங்கிற் குலபதிக் கண்ணன் என்னும் சான்றோர் குறுந்தொகையின் 252 ஆவது செய்யுளைச் செய்தவர்.

66. கண் சிவந்தவோ?

பாடியவர் : இனிசந்த நாகனார்.
திணை : பாலை.
துறை : மனை மருட்சி.

[(து–வி.) உடன்போக்கிற் சென்ற தன் மகளது செயல் அறத்தோடு பட்டதென்று தேறினும், மெல்லியளாய அவள் தான் வெஞ்சுரத்தை எப்படிக் கடந்து செல்வாளோ?' என்ற ஏக்கம் தாய்க்கு மிகுதியாகிறது. அவள் தன்மகளை நினைந்து இப்படிப் புலம்பிக் கூறியபடி கலங்குகின்றாள்.]

மிளகுபெய் தன்ன சுவைய புன்காய்
உலறுதலை உகாஅய்ச் சிதர்சிதர்ந்து உண்ட
புலம்புகொள் நெடுஞ்சினை ஏறி, நினைந்துதன்
பொறிகிளர் எருத்தம் வெறிபட மறுகிப்
புன்புறா உயவும் வெந்துகள் இயவின் 5
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்,
சிவந்து ஒளிமழுங்கி அமர்த்தன கொல்லோ
கோதை மயங்கினும் குறுந்தொடி நெகிழினும்,
காழ்பெயல் அல்குற் காசுமுறை திரியினும்,
மாண்நலம் கையறக் கலுழும்என் 10
மாயக் குறுமகள் மலர்ஏர் கண்ணே!

கூந்தலிற் சூட்டியிருந்த மாலையானது சிக்குண்டாலும், குறிய வளைகள் நெகிழ்ந்து சரியினும், பரல்கள் பெய்தலைக் கொண்ட அல்குலிடத்தே விளங்கும் மேகலையானது தன்னிற் பொருத்தப்பெற்ற பொற்காசுகள் முறைதிரிந்து கிடப்பதாய்ப் போனாலும், மாட்சிப்பட்ட தன் அழகெல்லாம் அழிந்தொழியுமாறு கண்கலங்கும் பேதைமை உடையவள், என் அழகிய இளமகள் ஆவாள்.

மிளகினைப் பெய்தாக்கியதுபோன்ற சுவையினையுடைய புல்லிய காய்களையும், காய்ந்த கிளைகளையும் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/132&oldid=1678109" இலிருந்து மீள்விக்கப்பட்டது