பக்கம்:நற்றிணை 1.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

145


பச்சூனும் கலந்து படைக்கும் பலி. மன்றம் – பேய் மன்றம். செவ்வரி மயிர் - செவ்விய மென்மயிர்; செவ்விய வரியின் மயிரும் ஆம். வார்கோல் – நெடிய தாள். 'சாய்க்காடு' – திருச்சாய்க்காடு என்னும் ஊர்.

விளக்கம் : பேய் வந்து மன்றம் பிளக்கும்படியாக ஆரவாரித்துப் பலியேற்று உண்ணும் மாலைப் போதிலே, அவரருகிருக்கவும் அஞ்சுவேன் யான்; அவரின்றேல் என்னாவேனோ என்பதாம் மாலைக் காலத்துப் பேய்க்குப் பலியூட்டு ஊட்டுதல் பண்டைய மரபாகும். 'புன்கண் மாலை என்றது, பிரிவால் நலிந்த மகளிரை மேலும் அது வருத்துதலால்.

இறைச்சிகள் : (1) பேய் மலர்ப்பலியை உண்ணுதற் பொருட்டாக மன்றத்தைப் போழும் குரலோடு ஆர்ப்பரித்து வருதலைப் போலத் தலைவியின் நலத்தை உண்ணும் பொருட்டாகப் பசலையும் ஆர்த்தெழும் என்பதாம். அதனால், பலரும் அறிய அலரும் மிகும் என்பதுமாம்.

(2) கதிரரிவாரைப் பற்றி நினையாதே செறுவிலே அன்னம் துஞ்சிக் கிடந்தாற்போல, யானும் அவர் பிரிவைப்பற்றிக் கருதாதே அவரது செஞ்சாந்து பரந்த மார்பிடத்தே துயின்று கிடந்தேன் என்பதாம்.

74. அவன் பெண்டு!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : தலைவி பாணற்கு வாயின் மறுத்தது.

[(து–வி) தலைவியை மறந்து பரத்தைபால் மயங்கிக்கிடந்த தலைவன், அவள் புதல்வனைப் பெற்று வாலாமை கழிந்தனளாதலைக் கேட்டதும், அவளை விரும்பியவனாகப் பாணனைத் தூது விடுக்கின்றான். அந்தப் பாணனுக்குத் தலைவி கூறுவதாக அமைந்தது இது.]

வடிக்கதிர் திரித்த வல்ஞாண் பெருவலை
இடிக்குரற் புணரிப் பௌவத்து இடுமார்
நிறையப் பெய்த அம்பி காழோர்
சிறைஅருங் களிற்றின் பரதவர் ஓய்யும்
சிறுவீ ஞாழற் பெருங்கடற் சேர்ப்பனை 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/146&oldid=1678209" இலிருந்து மீள்விக்கப்பட்டது