பக்கம்:நற்றிணை 1.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

நற்றிணை தெளிவுரை


இறைச்சி : 'புறத்தே முட்களை உடைத்தேனும், உள்ளே இனிதான சுளைகளையும் உடைத்தான பலாப்பழம் என்றது. அவ்வாறே புறத்தே கடிதல் போன்று வெறுத்து நோக்கினும் உள்ளே இன்பந்தரும் அருள் கொண்ட நெஞ்சினள் தலைவி என்பதாம்.

78. நாம் பிழைத்தோம்!

பாடியோர் : கீரங்கீரனார்.
திணை : நெய்தல்.
துறை : வரைவு மலிந்தது.

[(து–வி.) வரைவிடை வைத்துப் பொருள் தேடி வருவதற்குப் பிரிந்து சென்றோனாகிய தலைவன். வருவதாகக் குறித்துச் சென்ற பருவத்தின்கண் வராமையினால், தலைவியின் வருத்தம் மிகுதியாகின்றது. அவ்வேளை, அவன் வரைவொடு வருதலை அறிந்த தோழி, தலைவிபாற் சென்று, மகிழ்வோடு அதனைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

கோட்சுறா வழங்கும் வாட்கேழ் இருங்கழி
மணிஏர் நெய்தல் மாமலர் நிறையப்
பொன்னேர் நுண்தாது புன்னை தூஉம்;
வீழ்தாழ் தாழைப் பூக்கமழ் கானல்,
படர்வந்து நலியும் சுடர்செல் மாலை 5
நோய்மலி பருவரல் நாம்இவண் உய்கம்;
கேட்டிசின் வாழி, தோழி! தெண்கழி
வள்வாய் ஆழி உள்வாய் தோயினும்,
புள்ளுநிமிர்ந் தன்ன பொலம்படைக் கலிமா
வலவன் கோல்உறல் அறியா, 10
உரவுநீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே!

தோழி ! நீதான் இனி இன்பமுற்று வாழ்வாயாக! வலிமை வாய்ந்த தேர்ச் சக்கரத்தின் உள்வாயளவுக்கு தெளிந்த கழியிடத்தே அழுந்தப்பெறினும், பறவை பறந்து சென்றாற்போலச் செல்லும் தன்மையினையுடையவும். பொன்னணிகளைப் பூண்டு செருக்கியவுமான குதிரைகள் தம்மைச் செலுத்தும் பாகனின் தாற்றுக்கோல் தம்மேற்பொருந்துதலை அறியாவாய்ச் செல்லும் தன்மையுடைய, வவிய கடல்நீர்ச் சேர்ப்பனது. தேர் வந்துகொண்டிருப்பதை அறிவிக்கும் மணியினது குரலினை, அதோ நீயும் கேட்பா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/155&oldid=1679063" இலிருந்து மீள்விக்கப்பட்டது