பக்கம்:நற்றிணை 1.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

161


குதிரைகளை, கொய்யும் பிடரிமயிரையுடைய எருத்திலே பூட்டிய மணிகள் ஆரவாரிக்க, நின் தேரிடத்தே நீயும் பூட்டிச் செலுத்துவாயாக. பூண்கள் தளர்ந்து தாழ்ந்த வனப்புடைய மார்பகங்களின் முகட்டிலே நீர்த்துளிகள் தெறித்து வீழுமாறு அழுதவளாக, அழகிய மாமையினையுடைய தலைவியானவள், வீட்டிலேயிருந்தபடி வருந்தியிருப்பாள். அவள், நமக்கு விருந்து செய்கின்ற விருப்பத்தோடும் வருந்தினளாகத் தளர்ந்தபடியே நம்மை நோக்கி முறுவலிக்கும் அந்த இனிதான நகையினை யாமும் கண்டு மகிழ்வேமாக!

கருத்து : 'பிரிவுத் துயரால் வருந்தியிருக்கும் தலைவியிடத்தே அது நீங்கித்தோன்றும் முறுவலைக் கண்டு இன்புறுதற்கு விரும்பினேம். அதற்கு உதவுமாறு நீயும் நின் தேரை விரையச் செலுத்துக' என்பதாம்.

சொற்பொருள் : குறைய – பள்ளமாக, கொட்டிப் பரிந்து - கொட்டி நடந்து. 'ஆதி' – 'ஆதி' என்னும் நடையமைதி. நோன்மை – வலிமை. எருத்து – பிடர். கரை வலம் – முகட்டுப் பாங்கு. அம்மா – அழகிய மாமை நிறம்.

விளக்கம் : 'பெய்ம்மணி ஆர்ப்ப' என்றது. தேரின் வரவை முற்படவே கேட்டறிந்து, அவள் வரவேற்று விருந்து செய்தற்கு முற்படுவாள் என்றதனாலாம். 'வேந்தன் உறுபகை தணித்தனன்' என்றது, தன்வினை முடிவுற்றது என்பதுடன், தலைவிபால் உற்ற பகையான பசலை படர்தலைத் தான் சென்று தணித்தலை விரும்பினதை அறிவுறுத்தியதுமாம். 'மன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி' என்றது, குதிரையினது தகுதி மேம்பாட்டை உரைத்ததாம், 'அழுதனள் உறையும் அவள் விருந்தயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய முறுவல் இன்னகை காண்கம்' என்றது நம்மைக் கண்டதும் அவள் துயர் முற்றவும் நீங்கினளாய்ப் பெரிதும் மகிழ்ச்சி கொள்வாள் என்பதாம். இதனால், தலைவிக்குத் தன்பாலுள்ள அளவு கடந்த காதற்செவ்வியையும், தன்னைப் பிரியின் கொள்ளும் துயர மிகுதிப்பாட்டையும். தன்னைக் காணின் அந்தவளவே தீர்கின்ற அதன் செவ்வியையும் நயம்படக் கூறுகின்றான் தலைவன். இவற்றை அடைதற்கு வாய்ப்பாகத் 'தேரை விரையச் செலுத்துக' என்கின்றான். 'ஆதி' என்பது குதிரைக் கதியுள் ஒன்று. குதிரையோட்டம் ஐவசைப்படும் என்பர்; அவற்றுள் ஒன்று இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/162&oldid=1681245" இலிருந்து மீள்விக்கப்பட்டது