பக்கம்:நற்றிணை 1.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

நற்றிணை தெளிவுரை


மிக வருந்துவாய்; ஆதலின், இப்போது யான் நின்னையகன்று போய்வருவேன் என்பதாம்

மேற்கோள் : 'பரிவுற்று நலியினும்' என்னுந் துறைக்கு நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுவர் – (தொல். பொருள். சூ.103. உரை). புணர்ந்து நீங்கும் தலைவன், பிரிவதற்கு ஆற்றானாய்க் கூறியதாகப் பொருள் கொள்க.

பிறபாடம் : 'என்னுள் வருதியோ நல்நடைக் கொடிச்சி; 'கானவர் பெயர்கஞ் சிறு குடியானே.'

83. குழறாய் கூகையே!

பாடியவர் : பெருந்தேவனார்.
திணை : குறிஞ்சி
துறை : இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

[(து–வி.) இரவுக்குறி வந்த ஒழுகுதலிலே மனஞ் செல்லுபவனாகித் தலைவியை வரைந்து மணந்து கொள்ளுதலில் ஈடுபடாத ஒரு தலைவனுக்கு அறிவு கொளுத்தக் கருதிய தோழி, அவன் வந்து சிறைப்புறத்தானாக இவ்வாறு கூறுகின்றனள்.]

எம்ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முதுமரத்து உடனுறை பழகிய
தேயா வளைவாய்த் தெண்கண் கூர்உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலிமுந்து கூகை!
மைஊன் தெரிந்த நெய்வெண் புழுக்கல், 5
எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கைஎம் காதலர் வரல்நம்சைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றா தீமே.

எம் ஊரது முன்பக்கத்தேயுள்ள உண்ணுநீர்ச் சுனையின் அருகிலே பருத்த அடியையுடையதும் கடவுள் வீற்றிருப்பதுமான முதிய மரம் நிற்கும். அம் மரத்தினிடத்தே இருப்பாயாய், எம்முடன் ஓரூரிலே தங்கியிருந்து பழகிய கூகையே! தேயாத வளைந்த வாயினையும், தெளிவான கண்பார்வையினையும். கூரிய நகங்களையும் உடையாய்! வாயாகிய பறையின் முழக்கத்தாலே பிறரை வருத்துதலைச் செய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/165&oldid=1681259" இலிருந்து மீள்விக்கப்பட்டது