பக்கம்:நற்றிணை 1.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

167


தோழி! தம்மிடத்தே வந்து இரந்து நின்றோரது துன்பத்தினை மாற்றுததற்கு இயலாத வறுமையுடைய இல்லிடத்து, வாழ்க்கையின்கண் கூடியிருக்க மாட்டதார் நம் தலைவர். எம்முடைய கண்களையும், தோள்களையும், தண்ணிய நறிய கூந்தலையும், தேமற் புள்ளிகள் நிரம்புதலுற்ற அல்குல் தடத்தையும் பலபடப் பாராட்டி எம்மை இன்புறுத்தினாராக, அவர் நேற்றைப் பொழுதினும் இல்லிடத்தினராய் எம்முடனே கூடி இருந்தனரே! இன்றோ அதுதான் கழிந்தது! பெரிதான நீர்ப்பரப்பை ஒப்பத்தோன்றும் வெளியதான பேய்த்தேரை, மரங்களற்ற நெடிதான பாலை நிலத்திடையேயுள்ள மான்கள் உண்ணு நீரென மயங்கி, அதனை நோக்கிச் செல்லாநிற்பதும், சுட்டமண் தயிர்த்தாழியிலே மத்திட்டுக் கடையும்போது வெண்ணெய் திரளாது சிதறிக்கிடக்கும் அத்தன்மைபோல உப்புப்பூத்துக் கிடப்பதுமான களர் நிலத்தைக்கொண்டதும், ஓமை மரங்கள் அழகிதாக விளங்கும் காட்டிடத்தும், வெயில் நிலைத்திருந்த வெப்பம் அலையிட்டு எழுந்தபடியிருக்கும் கடத்தற்கரியதுமான சுரநெறியிலே, பொருளீட்டி வருதலின் பொருட்டாகத் தாமே தனியராகச் செல்வார் என்பார்களே!

கருத்து : 'இதனை, எவ்வாறு பொறுத்து யானும் வருத்தமுறாது ஆற்றியிருப்பேன்?' என்பதாம்.

விளக்கம் : 'வல்லாதோர்' என்றது, இரந்தோர்க்கு ஈத்து உவக்கும் கடப்பாட்டினைப் பேணிவந்த பெருங்குடினராய தலைவர் என்று, அவனது குடிப் பெருமையை வியந்து கூறியதாம். இதனால், இல்வாழ்விற்குப் பொருளற்ற வறுமையால் அகன்றானல்லன் அவன் என்பதும் விளங்கும். ஏதிலரான பிறர்க்கு உதவும் பொருட்டாகத் தான் தனக்கு வருகின்ற துன்பத்தைப் பாராட்டாது, பொருள் தேடி வருவதற்குச் சென்றானாகிய அவன், உறுதுணையாகிய தன்னைப் பிரிவுத் துயரிடைப் படுத்தினனாகத் துன்புறச் செய்தனனே என நினைந்து நொந்ததும் ஆம். 'பல பாராட்டி நெருநலும் இவணர்' என்றது, அங்ஙனம் அவன் பாராட்டியது பிரிவினைக் கருதியதனாலே என்பதைத் தான் அறியாது போயினதை நினைந்து கலங்கிக் கூறியதாம். இதனாலேயே, 'என்ப' என அவன் பிரிவைத் தன் அணுக்கரால் அறிவிக்கப்பெற்ற பின்னரே, தான் அறிய நேர்ந்த தன்மையையும் கூறுகின்றனள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/168&oldid=1681284" இலிருந்து மீள்விக்கப்பட்டது