பக்கம்:நற்றிணை 1.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

177


யும் நின் வருத்தையும் முற்பட விட்டுக்கொண்டதாக, அதுதான் இனியும் நின்னிடத்திற்கு வருமோ? வாராதுகாண்' என்பதாம்.

கருத்து : 'தலைவரது வரவினாலே, இனி நின்னது துயரம் முற்றவும் நீங்கிப்போகும்' என்பதாம்.

சொற்பொருள் : கொண்டல் – கீழ்க்காற்று. முகடு – மலையுச்சி. நல்கா வாடை – அன்பு செய்யாத வாடைக் காற்று. பருமம் – யானைமேல் இடும் அம்பாரம், புலம்பு – வருத்தம். புன்கண்மை - துன்பஞ்செய்யும் தன்மை.

விளக்கம் : கார்ப்பருவத்தே மீள்வதாகக் கூறிச்சென்ற தலைவன், முன்பனிப் பருவத்தும் வாராதுபோகப் பெரிதும் வாடித் தளர்ந்திருந்தாள் தலைவி. அவ் வேளையிலே அவனும் வந்தானாக, அப்போது தோழி தலைவிபாற் சென்று, அவள் துயரனைத்தும் தீர்ந்ததென்னும் களிப்பினாலே இவ்வாறு கூறுகின்றாள். இனி, இதனைத் தலைவன் வருவதாகக் குறித்த பருவத்தின் இறுதிவரையினும் வாராதானாகப் பெரிதும் நலிவுற்றிருந்த தலைவி, ஆற்றுவிக்க முயன்றாளான தோழிக்குத் தன் ஆற்றாமை மிகுதியைப் புலப்படுத்தினளாகக் கூறியதெனவும் கொள்ளலாம்.

'உழுந்து முன்பனிப் பருவத்தில் முதிரும்' என்பதனை 'பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின் ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும், அரும்பனி அற்சிரம்' (குறுந். 68) எனவும், 'பற்றுவிடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப அற்சிரம் நின்றன்றாற் பொழுதே' எனவும் (அகம்.339) கூறுவர்.

பிறபாடம் : அழிபெயல் – வழிபெயல்.

90. அவை பயனற்றது!

பாடியவர் : அஞ்சில் அஞ்சியார்.
திணை : மருதம்.
துறை : தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ப் பாணனை நெருங்கி வாயில் மறுத்தது.

[(து–வி.) பரத்தையிற் பிரிந்தானாகிய ஒரு தலைவனுக்கு வாயிலாக வந்து, தலைவியின் உறவினைத் தலைவன் விரும்பினமை கூறி நின்றனன் பாணன் ஒருவன். அவன் பேச்சைக் கேட்ட தோழி, தலைவிக்கு உரைப்பாள் போல அவனை மறுத்துக் கூறுகின்றாள்.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/178&oldid=1683268" இலிருந்து மீள்விக்கப்பட்டது