பக்கம்:நற்றிணை 1.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

179


சொற்பொருள் : அழுங்கல் – ஆரவாரம். கைதூவா – கை ஓயாத, புகாப்புகர் – கஞ்சிப் பசை, வாடாமாலை – பொன்னரி மாலை. நல்கூர் பெண்டு – வறுமையுற்ற பெண்: பரத்தையின் தாயைக் குறித்தது.

விளக்கம் : உடையோர் – உடையினை ஒலித்தற்குப் போடுவோர். இவர் மிகுதிப்படுதலால், புலைத்தி இரவினும் கைஒயாளாய் ஒலிக்கவாயினாள். அப் பரத்தைபால் தொடர்புடையவன் தலைவன்: 'அன்று அவள் ஊடி அகன்று போதலினாலே, இன்று மனைநாட்டம் பெற்றோனாக வந்து தலைவியைக் கருதினான் போலும்?' என்கின்றாள். 'ஆடியல் விழாவின் அழுங்கல் மூதூர்' என்றது, மருத நிலத்தின் வளமைச் சிறப்பினையும், அதன்கண் வாழ்வோரது இன்ப நாட்டங்களையும் காட்டுவதாம். 'ஆயம் ஊக்க ஊங்காள்' என்றது, அவள் தான் தலைவன் வந்து தன்னை ஊக்குவதனை எதிர்பார்த்தமையும், அவன் வராதுபோயினனாகவே, தான் ஊசலாட விருப்பம் இல்லாதாளாய் வெறுப்புற்று அழுதுகொண்டே அகன்றமையும் கூறியதாம்.

'சில்வளைக் குறுமகளாகிய அவளையே, அவள்பால் அருளின்றிக் கலங்கியழச் செய்த கன்னெஞ்சினன், புதல்வனைப் பெற்றுத் தளர்ந்திருக்கும் தலைவிபாற் காதலுற்று வருதல் என்பது பொருத்தமற்றது' என்றனள். அன்றி, 'அவளையும் வெறுத்து மனந்திரும்பி வருகின்ற சிறப்பினன்' என, வாயில் மறுப்பாள்போலத் தலைவனை ஏற்குமாறு தலைவிபால் வற்புறுத்தியதாகவும் கொள்க.

மேற்கோள் : 'தலைவனோடு ஊடியிருக்கும் தலைவி, வாயில் வந்த பாணனைக் குறித்துக் கூறியது இது' எனக்கொள்வர் நச்சினார்க்கினியர்—(தொல். பொருள்.சூ.147 உரை .) ஆசிரியர் இளம்பூரணனாரும் 'இது பாங்கனைக் குறித்துத் தலைவி கூறியது' என்பர் (தொல். பொருள். 145. உரை).

91. நீ உணர்ந்தாயோ!

பாடியவர் : பிசிராந்தையார்.
திணை : நெய்தல்.
துறை : தோழி தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது.

[(து–வி.) வரைபொருட்குப் பிரிந்து சென்றான் தலைவன், அத் தலைவனின் பிரிவாலே, தலைவி மிகவும் வருத்தமுற்று நலிந்திருந்தனள். ஒரு நாட் பகல் வேளை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/180&oldid=1683321" இலிருந்து மீள்விக்கப்பட்டது