பக்கம்:நற்றிணை 1.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

நற்றிணை தெளிவுரை


உள்ளார் கொல்லோ தோழி; துணையொடு
வேனில் ஓதிப் பாடுநடை வழலை
வரிமரல் நுகும்பின் வாடி அவண
வறன்பொருந்து குன்றத்து உச்சிக் கவாஅன்
வேட்டச் சீறூர் அகன்கண் கேணிப் 5
பயநிரைக்கு எடுத்த மணிநீர்ப் பத்தர்,
புன்தலை மடப்பிடி கன்றோடு ஆர
வில்கடிந்து ஊட்டின பெயரும்
கொல்களிற்று ஒருத்தல சுரன்இறந் தோரே?

தோழீ! வேனிலின் கொடுமையினாலே வருந்திய நடையைப் பெற்றது ஓந்தி. அது கருவழலைப் பாம்பைப்போலத் தோற்றும் வரிகளையுடைய மரற்கள்ளியின் இளமடலைப் போல வாட்டமுற்றதாகிக் கிடக்கும் அவ்விடத்ததாகிய, வறட்சிபொருந்திய குன்றத்தின் உச்சியது ஒரு பக்கத்தே, வேட்டுவக்குடியினரின் சிற்றூரும் இருக்கும். அகன்ற வாயையுடைய கிணற்றினின்றும், பாற்பயனைத் தருகின்ற நமது ஆனிரை உண்ணுமாறு, இச் சிற்றூரினர் தெளிந்த நீரை எடுத்துப் பத்தரிலே நிரப்பி வைப்பர். புல்லிய தலையையுடைய தன் இளம்பிடியானது கன்றோடும் நீருண்டு வேட்கை தீருமாறு. அதனை மூடியிருக்கும் விற்பொறியை முறித்துப் போட்டு, அவற்றுக்கு நீருட்டிய பின்னர்த் தன் வழியே அவற்றுடன் செல்லாநிற்கும், கொல்லும் சினத்தையுடைய களிற்றுத் தலைவன் ஒன்று. அத்தகைய களிற்றையுடைய சுரநெறியைக் கடந்து போயினவரான தம் தலைவர் தாம், அந்தக் களிற்றது மனைவியையும் கன்றையும் பேணுகின்ற ஈடுபாட்டை நினைத்தாராய், நம்மையும் நினைக்க மாட்டாரோ?

கருத்து : 'அவர் நினைத்திலர்; ஆகலின் அன்பற்றார்; அவர் குறித்து நீ ஏங்கியழிதல் வேண்டா' என்பதாம்.

சொற்பொருள் : ஓதி – ஒந்தி பாடுநடை –மெலிந்தநடை. வழலை –கருவழலைப் பாம்பு. மரல் – மரற்கள்ளி. நுகும்பு – இளமடல். ஒருத்தல் – தலைமை கொண்ட ஆண் விலங்கு.

விளக்கம் : காட்டு வழிச் செல்வார், விற்பொறியை முறித்துப் போட்டுத் தன் பிடியையும் கன்றையும் நீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/183&oldid=1685920" இலிருந்து மீள்விக்கப்பட்டது