பக்கம்:நற்றிணை 1.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

நற்றிணை தெளிவுரை


ராக வருத்தமுற்றிருக்கும் மகளிரது தன்மையினைத் தலைவனோ அறியாதோனாய் உள்ளனன். கைவினைத்திறனிலே வல்லானாகிய பொற்கொல்லன் கவின்மிகுமாறு கழுவித் தூய்மை செய்யாத, கழுவாத பசுமுத்தைப்போலக் குவிந்த பூங்கொத்துக்களையுடைய புன்னையானது, அரும்பியிருக்கின்ற தன்மை கொண்ட, புலவுநாற்றத்தையுடைய கடற்கரை நாட்டுச் சேர்ப்பனாகிய நம் தலைவன்தான், என்ன தன்மையனாகிய ஓர் ஆண்மகளோ?

கருத்து : 'குறிப்பாகப் பலபட உரைத்துக் காட்டியும், துயரத்தைத் தீர்த்தற்கு முற்படாத தலைவன், என்னவோர் ஆண்மகனோ?' என்பதாம்.

சொற்பொருள் : அலைக்கலங்கிய – அலைத்தலாலே கலக்கமுற்ற. மதன் – வலிமை. தட்ப – தடை செய்ய. கம்மியன் – பொற்கொல்லன். கவின் – பெருவனப்பு. மண்ணா – கழுவாத.

விளக்கம் : தான் பெற்றுத் துய்க்கும் இன்பத்திலேயே நினைவாயிருக்கும் தலைவனது அன்பற்ற தன்மையினை நினைந்தானாய், இப்படி வருந்திக் கூறுகின்றாள் தலைவி, இதனைக் கேட்கும் தலைவன், விரைய வரைந்து சென்று மணம் பெறுதற்கு முயல்வான் என்பதாம் புன்னைய பூவரும்புகள் கழுவாத பசுமுத்தைப்போலத் தோற்றுவன. புன்னை முகை விரிந்து மணம் பரப்பத் தொடங்கின், கடற்கரையின் புலவு நாற்றமும் மறையும். அதுபோலத், தலைவன் தன்னை வரைந்து மணம்புணரின், களவும், அதனாற் பெறும் அவரால் வரும் துயரமும் அகன்றுபோம் என்பதும் ஆம்.

மேற்கோள் : இச்செய்யுளை, 'ஏமஞ்சான்ற உவகைக் கண்ணும்’ தலைவிக்குக் கூற்று நிகழ்தற்கு எடுத்துக்காட்டுவர், நச்சினார்க்கினியர் – (தொல். பொருள். சூ. 111 உரை). அதன் கண், 'மண்ணாப் பசு முத்தேய்ப்ப நுண்ணிதின் தாங்கி பெண்மை தட்ப' வென மாறிக், கழுவாத பசிய முத்தம் தனது மிக்க ஒளியை மறைத்துக் காட்டினாற்போல, யாமும் புணர்ச்சியால் நிகழ்ந்த மிக்க நலனைப் புறத்தோர்த்குப் புலப்படாமல் அரிதாகத் தாங்கிப் பெண்மையாம் தகைத்துக் கொள்ளும்படியாகத், தன் மார்பால் வருத்தமுற்றாரைக் கண்டு அறியாதோனாகிய சேர்ப்பனை என்ன மகனென்று சொல்லப்படும் என மகிழ்ந்து கூறினாள், ஆர்வ-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/187&oldid=1685979" இலிருந்து மீள்விக்கப்பட்டது