பக்கம்:நற்றிணை 1.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

193


பன்றியொன்று, வயலிடத்துச் சென்று உணவுதேடும் விருப்பமுற்று எழுந்தது. ஓங்கிய மலையிடத்துள்ள அகன்ற தினைப்புனத்தை அடைந்தது. அவ்விடத்தே இட்டிருந்த பெரிதான பொறியமைக்கப் பெற்ற புழைவழியிலே புகும் பொழுது, தீயபக்கத்தே பல்லி ஒலிக்கக் கேட்டது. அதனால், தனக்கு ஊறுவருமென அச்சமுற்று, மெல்லமெல்லப் பின்னாகவே சென்று. தன்னுடைய கல்முழையிடத்தேயுள்ள பள்ளியிடத்தே போய்த் தங்குவதாயிற்று. இத் தன்மையுடைய நாடனே! எந்தை காத்துவரும் காவலையுடைய அகன்ற மாளிகைக்கண் தூங்காது காத்திருக்கும் காவலாளர் அயர்ந்திருக்கும் பருவத்தை நோக்கினாயாய், இரவின்கண்ணே நீயும் வருகின்றாய்! அதனைக் காட்டினும், நாள்தோறும் வழியிடை நினக்கு ஏதமுண்டாகுமோ எனக் கலங்குவதனாலே இமை பொருந்துதலைப் பெறாத கண்களோடு, நின்பாற் சென்று என்பால் மீண்டும் வராதுபோயின அன்பற்ற எம் நெஞ்சத்தின் செயலும் மிகக் கொடிதாயிருப்பன காண்!

கருத்து : 'இரவிடை வாராயாய், இவளை வரைந்து கோடலிலேயே நின் மனத்தைச் செலுத்துக' என்பதாம்.

சொற்பொருள் : நூழை – நுழையும் சிறு வழி, பிறக்கே – பின்பக்கமாக: வந்த வழியே மீளவும். கடிப்பு – காவல். நார் – அன்பு.

விளக்கம் : 'செய்' என்றது, தினைக் கொல்லையை, விலங்கினம் கவராமல்படிக்குப் பொறியிட்டுக் காத்தல் வழக்கம் என்பதனை, 'வீங்குபொறி நூழை' என்பதால் அறியலாம், 'தனக்கு ஊறுநேருமென்றால், தான் உண்ணு தலையும் கைவிட்டுப் பாதுகாப்பான தன் அளையிடத்தே சென்று பதுங்கும் பன்றியையுடைய நாடனாயிருந்தும், காவலையுடைய கடிமனைப் புறத்தே இரவுப்போதில் துணிந்து வருகின்றனனே' என்பதாம். இதனால், இரவுக்குறி வருதலைக் கைவிடுதல் நன்றென்பதைக் குறிப்பாகக் கூறினாள்.

உள்ளுறை : உணவு வேட்டுச் சென்ற பன்றி, தீய பக்கத்தே பல்லியொலிக்கக் கேட்டதும் உணவை மறந்து அளைநோக்கிப் போயினதைப்போலத், தலைவனும் தலைவியை வேட்டுவந்தவன், துஞ்சாக் கோவலரது ஆரவாரத்தைக் சேட்டதும் அகன்றுபோதல் நேரும் என்பதாம். இரவுக்குறி இடையீடுபடுதல் நேருமென்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/194&oldid=1687573" இலிருந்து மீள்விக்கப்பட்டது