பக்கம்:நற்றிணை 1.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

195


அதனைக் கழித்தது. அதனையே நீயும் நோக்கினை இதுவே 'கார்ப்பருவம்' என்று கருதித் தாமும் மறதிகொண்ட உள்ளத்தவாய்ப் பிடவும் கொன்றையும் காந்தளும் இன்ன பிறமலர்களும், தாமும் அறிவற்றன ஆதலினாலே, பலவாக மலர்களைத் தோற்றுவித்துள்ளன! அதனையும் காண்க!

கருத்து : 'தலைவர் குறித்துச் சென்ற கார்ப்பருவம் இஃதன்று, இஃது ஒரு வம்ப மாரிகாண்' என்பதாம்.

சொற்பொருள் : வறந்த – வறட்சியுற்ற. உருப்பு – வெப்பம். பனிக்கும் – நடுக்கஞ் செய்விக்கும். கமஞ்சூல் – நிறைசூல், மாமழை – கார்மேகம். அயர்தல் – மறத்தல். கோடல் – காந்தள். மடவ – அறிவற்றன.

விளக்கம் : வந்தது காரெனினும், தலைவியது வருத்த மிகுதியைப் போக்கக் கருதின தோழி, இவ்வாறு மறுத்து உரைக்கின்றாள். 'மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை; கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக் கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த வம்பமாரியைக் காரென மதித்தே' என வரும் குறுந்தொகைச் செய்யுளும் (66); 'பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே (குறுந். 94) என்பதும், இவ்வாறு வழங்கும் தோழி கூற்றைக் காட்டுவனவாகும். பருவம் அன்றென வற்புறுத்தலின், இதனை இருத்தல் நிமித்தமான முல்லைத்திணைச் செய்யுளாகக் கொண்டனர். கொன்றை கார்காலத்து மலரும் என்பதைக் 'கார் விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்" எனவரும் அகநானூற்றுக் கடவுள் வாழ்த்தால் உணர்க. 'கொன்றை ஒள் வீ தா அய். செல்வர் பொன்பெய் பேழை மூய்திறந்தன்ன கார் எதிர் புறவு' (குறு. 233:2.4) என்பதும் இதனைக் காட்டும். 'தலைவர் வாய்மை தவறார்; குறித்தபடி வருவார்' எனக் கூறித் தேற்றுபவள், இவ்வாறு காரின் தோற்றத்தையே மறுத்தாள்போலக் கூறுகின்றாள் என்றும் கொள்க.

100. நகுவேன்!

பாடியவர் : பரணர்.
திணை : மருதம்.
துறை : பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப விறலிக்கு உடம்படச் சொல்லியது.

[(து–வி) தன்னைவிட்டுத் தலைவன் தலைவிபாற் சென்றதனால், அவனுறவு பெற்றிருந்த பரத்தையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/196&oldid=1687579" இலிருந்து மீள்விக்கப்பட்டது