பக்கம்:நற்றிணை 1.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

199


இத் தன்மைகொண்ட துறைக்கு அண்மையிடத்ததான இப்பக்கமும் இனிதாயிருந்தது. அவளாற் பெற்ற காமநோயினாலே, அதுவும் இப்போது இரங்கத்தக்க தாயிற்றே! இனி எங்ஙனம் யானும் உய்வேனோ?

கருத்து : 'இயற்கையின் இன்பத்தையும் என்னுள்ளம் இதுகாலை வெறுப்பதாகின்றது' என்பதாகும்.

சொற்பொருள் : முற்றா மஞ்சள் – இள மஞ்சள்! பசு மஞ்சள் எனவும் உரைப்பர். பிணர் – சருச்சரை. ஐது, மெல்லிது; நுண்ணிதுமாம்.

விளக்கம் : இறாமீன் குவியலைக் காயவைத்திருக்கின்றதனாலே எழுகின்ற புலால்நாற்றம் புன்னைப் புதுமலரது நறுநாற்றத்தாலே அகன்று போகின்றாற்போல, என் காம நோய்மிகுதியினாலே வந்துற்ற நலிவும், அவளோடு கூடி மணம் பெறுவதனாலே நீங்கிப் போம்' என்கின்றான்.'தாம் நிழலிடத்திருந்தபடி, இறாலின் குவியல் வெயிலிற் கிடந்து காய்வதை ஆய்ந்தபடி, அவற்றது உயிர்நீக்கத்தைப் பற்றிச் சற்றேனும் கவலையுறாது வாழ்கின்ற கொடிய இயல்பினரான பரதவரது மகளிராதலின், தன் துயரத்தைப்பற்றியும் கவலைகொள்ளாராய்த் தனக்கு அருள்செய்யாராய்த் தன்னையும் வெறுத்துப் போக்குகின்றனர்' எனக் கூறினனுமாம். வளைந்து வளைந்து நெடுகக் கிடக்கும் கழியாதலின் 'சூழ்கழி' என்றனர். கழியில் இறாமீன் உளவென்பது. 'அருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு' (குறு. 320:2) என்பதனாலும், தெண்கழி சேயிறாப் படூஉம் (ஐங்.196:2) என்பதனாலும் உறுதிப்படும். தலைவியைத் தலைவன் கண்டு காமுற்ற இடம் அதுவெனக் குறியிடத்தை உணர்த்தியதும் ஆம்.

இதனால், தலைவி அவனோடு பண்டே களவுறவினைப் பெற்றவள் என்றறியும் தோழியும், தலைவனது வேண்டுகோளுக்கு இசைவாள் என்பதாம்.

மேற்கோள் : 'வரைதற் பொருட்டுத் தலைவர் வேறுபாட்டிற்கு ஆற்றாத தோழி, சிறைப்புறமாகக் கூறியது' எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். அகத் 22 உரை. மேற்கோள்.) இங்ஙனமாயின், இச் செய்யுள் தோழி கூற்றாக அமையும். அதற்கேற்பப் பொருளுரைத்துக் கோடலும் பொருந்துவதாகும். தலைவியை விரைய வரைந்து வந்து மணந்துகொண்டு, ஊரிடத்து எழுந்துள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/200&oldid=1687591" இலிருந்து மீள்விக்கப்பட்டது