பக்கம்:நற்றிணை 1.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

205


இரவின் நடுமயாமத்தும் ஒளிகொள்ளும்படியாகச் சினத்து முழக்கும் இடியோடுங்கூடிய மின்னலும் இதுகாலை எழுகின்றது. இத்தகைய மழைக்காலப் பொழுதோடு பெய்யும் மழையாற் பெருகிய பெருவெள்ளம் கடந்து போகாமற்படிக்குத் குறுக்கிட்டுக் கிடப்பது மலைச்சாரல். இத்தகைய சாரலின் கண்ணே நோக்குதற்கும் அரிதான உச்சியிடத்தே அமைந்த சிறிதான நெறியினை நினைந்திருப்பவர் என்னையன்றியும், பிறரும் எவரேனும் இவ்வுலகில் உளராமோ?

கருத்து : 'வரும் வழியது கொடுமையை நினைந்து என் மனம் பெரிதும் கலங்குகின்றது; இதுதீர அவர் என்னை மணந்து கொள்ளாரோ?' என்பதாம்.

சொற்பொருள் : பேழ்வாய் – அகன்ற வாய். துறுகல் – வட்டக்கல்லாகத் தோன்றும் பாறை. சிலம்பு – மலைச்சாரல். புகற்சி – மனச் செருக்கு. தொண்டகம் – பறை வகையுள் ஒன்று: குறிஞ்சிக்கு உரியது. பெருநீர் – பெரு வெள்ளம்; மழையினாலே ஏற்பட்டது. விலங்கல் – குறுக்கிட்டுக் கிடத்தல்.

விளக்கம் : புலியும் களிறும் எதிர்ப்பட்ட ஞான்று தம்முட்போரிடும் இயல்பின. 'வரிவயம் பொருத வயக்களிறு போல' (புறம் 100:7) என்பது, இதனை வலியுறுத்தும் குறச்சிறாரின் அஞ்சாமைச் செயலைக் கூறினாள், தலைவன் ஆற்றது ஏதத்திற்கு அஞ்சானாய் வருகின்ற திண்மை கொண்டவன் என்பதனை நினைந்து. 'தொண்டக முழக்கினைக் கேட்டுத் தினையிற்படியும் கிளிகள் அஞ்சி அகலும்' என்றாள், வழியேகத்தினை நினைந்து களவின்பத்தை நாடிவந்து இரவுக் குறியிடத்தே இருக்கின்ற தான் அஞ்சும் அச்சத்தினை நினைந்து.

இங்ஙனம் தோழிபாற் சொல்லும் தலைவியது பேச்சைக் கேட்கும் தலைவன், இரவுக்குறியினை நாடிவருதலைக் கைவிட்டானாகத் தலைவியை மணந்து கொள்ளும் இல்லற வாழ்வினை விரைய மேற்கொள்ளுவதற்கான முயற்சிகளைச் செய்யத் தொடங்குவான் என்பது இதன் பயனாகும்

உள்ளுறை : புலியும் களிறும் பொருதக்கண்டு இன்புறும் குறச்சிறாரைப் போலத் தானும் தலைவனும் கொண்ட உறவை அறியாத பெற்றோர் வேற்றான் ஒருவனுக்குத் தன்னைத் தருதற்குக் கூறியதனால், உளப்போர் பெற்று நலி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/206&oldid=1688277" இலிருந்து மீள்விக்கப்பட்டது