பக்கம்:நற்றிணை 1.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

209


மடப்பஞ் செறிந்த நிலையினைப், பாகனே! அனுபவித்து அறிதலான அறிவுப்பாட்டினை நீயும்கண்டு அறிவாயோ?

கருத்து : 'அவள்பால் விரைந்து சென்றடைதற்கு உதவியாகத் தேரினை இன்னும் விரையச் செலுத்துக' என்பதாம்.

சொற்பொருள் : கொழீஇய – கொழிக்கப்பட்ட; கொண்டு குவிக்கப்பெற்ற. வெறிகொள்ளல் – மிகுதியான மணத்தினைக் கொள்ளல்; எக்கர் – மணல் மேடு. ஆடு – விளையாடு. அசைஇ – சோர்வுற்றுக் கலங்கி. வசை – குற்றம்; பழியும் ஆம். உயவு – வருத்தம். முறி – தளிர் அஞர்உறுதல் – மயக்கம் அடைதல்.

விளக்கம் : 'எக்கர் வெறி கொண்டது', அவள் உதிர்த்த ஞாழற் பூக்களினின்றும் எழுந்து பரவிய நறுமணத்தால் என்று கொள்க. 'ஆடுவரி அலவன் ஓடுவயின் ஆற்றாது அசைஇ' என்றது, நண்டலைத்து விளையாடும் நெய்தல்நில மகளிரது சிறுபருவ விளையாட்டினை. 'பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்று" (குறு : 303] எனவும், 'ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட ஆய்ந்த அலவன் (குறு : 316: 5.6) எனவும், 'திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி' (அகம்: 208.3) எனவும் வருவன பிறவற்றாலும் இவ் விளையாட்டினது இயற்கை விளங்கும். 'வசைதீர் குறுமகள்' என்றது, குறைப்படாத கற்புத் தன்மையினள் என்பதனாலாம். அவளை விரையச் சென்றடைதலை விரும்பினமாதலின், தேரினை விரையச் செலுத்துக என்கின்றனன். இனி, நண்டலைத்து விளையாடும் பருவத்தேயே அவளைக் காதலித்த தன்னுடைய காதற்செறிவினைக் கூறினனுமாம்.

107. நினைக்குந்தோறும் நகுவேன்

பாடியவர் : .........
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது.

[(து.வி.) தலைவனது பிரிவினுக்கு ஆற்றாதாளாய் நலிவுற்றிருந்த தலைவியைத் தேற்றும் பொருட்டாகத் தோழி சில கூறவும், அவளுக்குந் தலைவி தனது நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது]

உள்ளுதொறும் நகுவேன் தோழி! வள்ளுகிர்ப்
பிடிபிளந் திட்ட நார்இல் வெண்கோட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/210&oldid=1688289" இலிருந்து மீள்விக்கப்பட்டது