பக்கம்:நற்றிணை 1.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

215


அறியப்படும். குறித்த காலத்து வந்து துயரைத் தீர்த்தற்கு உரியான் வாராது போயதன் காரணத்தாலே, அவளது உயிரானது நிலைத்தற்கு இயலாதாய் மெலிவுற்று, உடற்கூட்டினைவிட்டு அகலுதற்கும் வழியற்றுத் துடிக்கின்றது என்பதும் இதனால் உணரப்படும். 'ஒருவேன் ஆகி உலமர' என்றது, அதுபோது துணையாயமைந்த தோழியும் தன்னில்லிற்குப் போய்விடத் தான் தனித்திருந்து அலமருதற்கு நேரிடும் என்பதனை துளியுடைத் தொழு – ஒழுக்கமுடைய தொழுவும் ஆம். 'நன்னுதல்' என்றது, பண்டிருந்த அழகுச் செவ்வியைச் சுட்டியது. 'ஒன்றுதும்' என்ற சொல், இயற்கைப் புணர்ச்சி பெற்ற காலத்து, அவளைத் தெளிவிப்பானாய், அவன் கூறிய 'சூளுரை' யாகும். 'உரைக்கல் ஆகா எவ்வம்' என்றது, சொல்லால் சொல்லிக்காட்டவியலாதபடி மிகுதிப்பட்ட துயரம் என்பதாம்.

தனிமைத் துயராலே நைந்து வாட்டமுறும் தன்னுடைய துயரநிலைக்கு, 'உச்சிக்கட்டிய கூழை ஆயின்' துயரநிலையினைக் கூறும் உவமைத்திறம் சிறப்பு உடையதாகும்.

110. சிறு மதுகை!

பாடியவர் : போதனார்.
திணை : பாலை.
துறை : மனை மருட்சி; மகள்நிலை உரைத்தலும் ஆம்.

[(து.வி.) (1) மனை மருட்சியாவது, உடன்போகிய மகளது விளையாட்டுப் பருவம் மாறாத தன்மையை எண்ணி, 'அவள் எப்படித் தன் காதலனுடன் இல்லறமாற்றுவாளோ' எனத் தாய் இல்லிடத்திருந்தபடியே உளங் கலங்குவது. (2) மகள் நிலை உரைத்தது என்பது, தலைவியின் இல்லற மாற்றும் செவ்வியினை உவப்புடன் கண்டு உவந்த செவிலித்தாய், அதனை நற்றாயிடம் வந்து பாராட்டி உரைப்பது.]

பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
'உண்' என்று ஓக்குபு பிழைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று 5
அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரிமெலிந்து ஒழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/216&oldid=1688827" இலிருந்து மீள்விக்கப்பட்டது