பக்கம்:நற்றிணை 1.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

நற்றிணை தெளிவுரை


அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் 10
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத்து உண்ணும் சிறுமது கையளே!

தேனிட்டுக் கலந்த தூய சுவைகொண்ட இனிதான பாலைக் கதிரொளி பரக்கும் பொற்கிண்ணத்தே ஒரு கையில் ஏந்திக்கொண்டு, அடிக்குங்கால் மேனியிற் சுற்றிப் படியும் மெல்லிய நுனியுடைய சிறு கோலினை மற்றொரு கையிடத்தே எடுத்துக்கொண்டு, 'இதனை உண்க' 'என்று கோலினை ஓங்குதலும், அதனின்றும் தப்பிப்போதற்கு நினைவாள் அவள். தெளிவான நீர்மைகொண்ட முத்துக்களைப் பரவலாக இட்டிருக்கின்ற பொற்சிலம்பானது ஒலிமுழக்கஞ் செய்ய, அவள் தத்திதத்திப் பிடிபடாது ஓடுவாள். மென்மையும் நரையும் கொண்ட கூந்தலினரும், செவ்விதாக வயதும் அதுபவமும் முதிர்ச்சி பெற்றவருமான செவிலித் தாயரும் அவளைத் தொடர்ந்து சென்று பற்றிப் பாலூட்டுதற்கு இயலாதாராய் மெலிவுற்று, அத்த முயற்சியையே கைவிட்டுவிடுவர். முற்றத்துப்பந்தர்க்கீழ் இப்படி ஓடியோடிச் செவிலியருடைய ஏவலை மறுக்கும் சிறு விளையாட்டைச் செய்பவள் ஆயிற்றே! அவள்தான், இதுகாலை இல்லறமாற்றுதற்கு உரித்தான அறிவையும் ஒழுக்கத்தையும் எவ்விடத்தே உணர்ந்துகொண்டனளோ? தன்னை மணந்து கொண்ட கணவனது குடியானது வறுமை அடைந்ததென்று, தந்தை கொடுத்த கொழுவிய சோற்றினையும் நினையாளாயினளே! நீர் ஒழுகும் பாங்கிலே வளைந்து வளைந்து உருவாகிக்கிடக்கும் கருமணலைப் போலப், பொழுதிற்கு உண்பதையும் கைவிட்டுத் தன் கணவனது குடியின் நிலைக்கேற்றபடி ஒழுகுவாளாய்த், தானும் ஒரு பொழுதுணவைக் கைவிட்டு உண்டு வாழும் சிறிதான மதுகை கொண்டவளாகவும் விளங்குவாளாயினனே!

கருத்து : 'இத்துணை மதுகையுடன் கூடிவாழும் செவ்வியினை எங்குத்தான் அவள் கற்றோளோ?' என்பதாம்.

சொற்பொருள் : பிரசம் – தேன். வெண் சுவை - தூய்தான சுவை; விருப்பந்தரும் சுவையும் ஆம். புடைத்தல் - அடித்தல். பிழைப்ப – தப்பியோட தௌநீர் – தெளிந்த நீர்மை: குற்றம் அற்றதாய தன்மை. தத்துற்று – தத்திச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/217&oldid=1688830" இலிருந்து மீள்விக்கப்பட்டது