பக்கம்:நற்றிணை 1.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

221


தலை – அகன்ற இடம். உரும்பு – அச்சவுணர்வு. மாக்கடல் – கருங்கடல்; பெருங்கடலும் ஆம். தாழ் நீர் – ஒழுகும் தன்மை. இமைப்பது – ஒளிபரப்புவது; கண்ணிமைப்பதுமாம்.

விளக்கம் : 'கார்மேகம் அவன் வரவினை அறிவித்தபடி, நம்மைத் தெளிவிப்பதனால், அதற்கு என்ன விருந்தினைச் செய்வோம்?' என்பதாம். அதற்கே அவன் வாய்மொழியில் நம்பிக்கையுள்ளபோது, நீதான் நம்புதலின்றி ஐயுற்று நலிவது பெரிதும் வருந்துதற்கு உரியது என்பதுமாம். வேங்கையின் மலர்ச்சி மணம்கொள்ளுதற்குரிய காலமாதலினாலே, அவன் தவறாது வந்தடைவான்; நின்னை விரைந்து மணந்து கொள்வான் என்பதும் ஆம்.

'மாக்கடல் முகந்து மணிநிறத்து அருவித் தாழ்நீர் நனந்தலை அழுந்துபடப் பாய வந்துள்ள மழையினைப்போல வேற்றுநாட்டிற் சென்று பெரும் பொருளினை ஈட்டிக் கொண்டானாய் வருகின்ற தலைவன், அதனைப் பரிசமாகத் நின் தந்தைமுன் சொரிந்து, நின்னை மணந்து இல்லற வாழ்வினை இனிதாற்றி இன்புறுத்துவன்' என்பதுமாம்.

இறைச்சி : களிறட்டு உரும்பில் உள்ளத்து அரிமா வழங்கும் பெருங்கல் நாடன்' என்றது, அவன் எதிர்ந்த பகையினை அழித்து வெற்றியுடன் மீள்வான் என்பதனைக்காட்டி, அவனது பிரிவு வேந்துவினைப் பொருட்டாயது என்பதனைப் புலப்படுத்துவதாம். நின்னைப் பற்றிய பசலையாகிய பகையினையும் ஒழித்து அவன் நின்னையும் காத்துப் பேணுவான் என்றதுமாம்.

113. எய்த வந்தன!

பாடியவர் : இளங்கீரனார்.
திணை : பாலை.
துறை : இடைச்சுரத்து ஆற்றானாகிய தலைவன் சொல்லியது.

[(து–வி) பொருளார்வத்தின் மிசையினாலே, தலைவியைப் பிரிந்து வேற்று நாட்டினை நோக்கிச் செல்வானாகிய தலைவனின் உள்ளம், சுரத்திடையே தலைவியை நாடிச்செல்லத் தொடங்குகின்றது. அவ்வேளை, அவன் தனக்குள் சொல்லிக் கொள்வதாக அமையும் செய்யுள் இது.]

உழைஅணந்து உண்ட இறைவாங்கு உயர்சினைப்
புல்லரை இரத்திப் பொதிப்புறப் பசுங்காய்
கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/222&oldid=1689917" இலிருந்து மீள்விக்கப்பட்டது