பக்கம்:நற்றிணை 1.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

நற்றிணை தெளிவுரை


[(து–வி) தலைமகன் இரவுக்குறியை விரும்பினனாக வருகின்ற வழியினது தன்மையை நினைந்து வருந்துவாள்போலச் சிறைப்புறத்திருக்கும் தலைவன் கேட்குமாறு இவ்வாறு தோழி கூறுகின்றனள். இரவுக்குறி மறுத்து வரைவு வேட்டல் இதன் கருத்தாகும்.]

வெண்கோடு கொண்டு வியலறை வைப்பவும்
பச்சூன் கெண்டி வள்ளுகிர் முணக்கவும்
மறுகுதொரு புலாவும் சிறுகுடி அரவம்
வைகிக் கேட்டுப் பையாந் திசினே;
அளிதோ தானே தோழி! அல்கல் 5
வந்தோன் மன்ற குன்ற நாடன்
துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரைப்
பொருதிரை நிவப்பின் வரும்யாறு அஞ்சுவல்
ஈர்ங்குல் உருமின் ஆர்கலி நல்லேறு
பாம்புகவின் அழிக்கும் ஓங்குவரை பொத்தி 10
மையல் மடப்பிடி இணையக்
கையூன்றுபு இழிதரு களிறுஎறிந் தன்றே.

தோழீ! நேற்றிராப் போதிலே, மலைநாட்டானாகிய தலைவனும் வந்தனன்காண். துளிகளாகப் பெய்த பெயலானது பொறித்த புள்ளிகளோடே விளங்கும் பழங்கரையினைப் பொருதும் அலைகளோடு மேலெழுந்து பெருகிவருகின்ற யாற்றினை நினைந்து யானும் அஞ்சுவேன். ஈரிய குரலினதான இடியின் பேராரவாரத்தைக் கொண்ட நல்ல ஏறானது, பாம்பின் கவினாக விளங்கும் அதன் தலையினை அழிக்கின்ற தன்மையுடைய உயர்ந்த வரையிடத்தே பொருந்திநின்றபடி, தன்பாற் காதலுடைய இளம்பிடியானது வருத்திப் புலம்ப, அதற்கு ஆதரவாகத் தன் கையை ஊன்றியபடியே களிறானது இறங்கிவர, அந்தக் களிற்றைக் கொன்று இழுத்துச் சென்றது அவ்யாறு. வெள்ளத்தோடு வந்த அதனது வெள்ளிய கோட்டினை வெட்டி எடுத்துக்கொணர்ந்து, அகன்ற பாறையிடத்தே வைப்பார்கள் குன்றவர் சிலர். அதன் பசிய ஊனைக் கிளைத்துத் தோண்டிப் பெரிதான அதன் நகத்தினைக் கொண்டு வந்து புதைத்து வைப்பார்கள் சிலர். இதனால், தெருக்கள்தோறும் புலால் நாற்றம் கவியும் தன்மைத்தாயிருந்தது நம் சிறுகுடி. அதனிடத்து, அதுகாலை எழுந்த ஆரவாரத்தினை இவ்விடத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/225&oldid=1689926" இலிருந்து மீள்விக்கப்பட்டது