பக்கம்:நற்றிணை 1.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

227


வானத்து அருள் முழக்கத்தினை யானும் இன்று கேளா நின்றேன் அல்லனோ!

கருத்து : 'குறித்த காலத்து வருதலில் அவர் ஒரு போதும் பிழையார்' என்பதாம்.

சொற்பொருள் : குறுதல் – பறித்தல். கண்படுதல் – உறங்குதல். உயிரினள் – உயிர்ப்பாளாயினள். மாக்குரல் – கரிய பூங்கொத்து; இது கருநொச்சி. ஊழ்த்தல் – தோன்றுதல். தவச்சேய் நாட்டர் – மிகத் தொலைவான நாட்டிலுள்ளார். உலப்பின்றி – கெடுதலின்றி; உலப்பு – ஒழிபு.

இறைச்சி : முற்றத்து முல்லை வேலியிடத்து நொச்சியிற் படர்ந்து கிடக்கிறது; காரின் எதிர்வினால் நொச்சியும் முல்லையும் ஒருசேர மலர்ந்திருக்கும் காட்சியைக் கூறினர்; அவ்வாறே இல்லிடத்திலிருந்து வருந்தும் தலைவியும் தலைவனைத் தழுவி மகிழ்வள். இருவரும் மகிழ்ச்சியடைவர் என்றற்காம். இவர்களது இல்லற வாழ்வு மலர்ச்சி பெற்று விளங்கும் என்பதுமாம்.

விளக்கம் : முல்லையும் நொச்சியும் மலர்ந்திருப்பக் கண்டதனால், அன்னை, பொய்கையிடத்துச் சென்று பூக்கொய்து தளரும் ஆய்மகளிரை அதிகாலையில் எழுப்பிப்போதற்குத் துண்டாளாயினள்; அவர்கள் இனிதாகக் கண்ணுறங்குமாறும் விட்டிருந்தனள்' என்பதாம். 'மனைநடு மௌவல் – மனையிடத்தே நட்டுப்பேணும் முல்லை: பூக்க மணம் வாய்க்கும்' என்பது மரபு. 'விசும்பின் தகவாவது தலைவியையும் தலைவனையும் ஒன்று சேர்ப்பதற்குக் காரினைத் தோற்றுவித்தது.

'சேய் நாட்டாராயினும். மிகப் பேரன்பினராதலின் சொற்பிழையாராய்த் திரும்பி வந்து அருள்வர்' என்பதாம்.

ஒப்பு : முல்லை மலர்த்து கார்காலத்தைத் தெரிவிக்கும் என்பது குறுந்தொகை 3: 8.126 முதலாய செய்யுட்களானும், 'ஆர்கலியேற்றொடு கார்தலை மணந்த, கொல்லைப் புதைத்த முல்லை மென்கொடி எயிறென முகைக்கும்' (குறு. 186) என்பதனாலும் அறியப்படும்.

116. இன்னும் கைவிட்டார்!

பாடியவர் : கந்தரத்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/228&oldid=1689937" இலிருந்து மீள்விக்கப்பட்டது